Published : 05 Dec 2016 08:51 AM
Last Updated : 05 Dec 2016 08:51 AM
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டு வதாலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. 2015-ம் ஆண்டில் மட்டும், இந்தியாவின் பெருநகரங்களில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 6,755 பேர் பலியாகி உள்ளதாக, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ஓர் அறிக்கை யில் தெரிவித்துள்ளது.
அதனால், பெரு நகரங்கள், மாநகரங்களில் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டு வதைத் தடுக்க போலீஸார் முக்கியச் சாலைகளில் வாகனச் சோதனைகளை மேற்கொள்கின்றனர். அதில் மது குடித்திருப்பதாக சந்தேகிப்பவர்களை, ப்ரீத் அனலைசர் (breath analyzer) சுவாசக் கருவியைக்கொண்டு கண்டு பிடிப்பார்கள். இந்த ப்ரீத் அனலைசர் கருவி மூலம் மது போதை வாகன ஓட்டிகளை கண்டுபிடிப்பதை நீதிமன் றங்கள் முக்கிய ஆவணமாக எடுத் துக்கொள்வதில்லை என்றும், மருத்துவர் வழங்கும் சான்றை அடிப் படையாக வைத்தே இந்த வழக்குகளை நீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதாக வும் கூறப்படுகிறது. அதனால், பல நகரங்களில் இந்த ப்ரீத் அனலைசர் சோதனை பெரும்பாலும் நடத்தப்படு வதில்லை.
சென்னை உள்ளிட்ட ஒருசில நகரங் களில் மட்டுமே மது குடித்துவிட்டு வருவோரை கண்டுபிடிக்க, இந்த ப்ரீத் அனலைசர் போன்ற சுவாசக் கருவிகளை போலீஸார் பயன்படுத்து வதாகக் கூறப்படுகிறது. போலீஸார் அதிகாரிகள் நெருக்கடியால் வழக்கு களை அதிகமாகக் காட்ட இரவு நேரங்களில் தாமதமாக வீடு திரும்பு வோரைக் குறி வைத்து போலீஸார், அவர்களை ஊதச் சொல்லி கெடுபிடி செய்வதாகவும் கூறப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள், மளிகைக் கடைகள், ஹோட்டல்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள், வியாபாரிகள்தான் இரவு நேரங்களில் பணி முடித்துவிட்டு, இருசக்கர வாகனங்களில் தாமதமாக வீடு திரும்பு கின்றனர். அப்போது அவர்களைப் பிடித்து ஊதச் சொல்லித் தொந்தரவு செய்வதால் போலீஸாருக்கும், வியாபாரிகள், தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி சாலைகளில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. அதனால், பல நகரங் களில் ப்ரீத் அனலைசர் கருவிகள் பயன்பாடில்லாமல் முடங்கிபோய் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறும்போது, “பலருக்கு காற்று மூலம் பரவும் தொற்று சுவாச நோய்கள் இருக்கலாம். போலீஸார், சுவாசக் கருவிகளில் ஒரே டியூப்பைக்கொண்டு எல்லோரையும் ஊதச் சொல்வதால் மற்றவர்களுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. மது குடித்து விட்டு வருவோரையும், குடிக்காதவர் களையும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். போலீஸார் மது குடித்துவிட்டு வராத வியாபாரி களைச் சில நேரங்களில் தங்கள் அதி காரத்தைக் காட்ட ஊதச் சொல்லி கட்டாயப்படுத்துவதாலேயே பிரச் சினை ஏற்படுகிறது” என்றனர்.
கவுரவப் பிரச்சினை
இதுகுறித்து மதுரை போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “ப்ரீத் அனலைசர் கருவியில் ஊதச் சொல்லும் ஒவ்வொரு நபருக் கும் டியூப் மாற்றப்படுகிறது. ஒரே டியூப்பில் எல்லா வாகன ஓட்டிகளை யும் ஊதச் சொல்வதில்லை. சிலர் ஊதச் சொன்னால் கவுரவப் பிரச்சி னையாகக் கருதுகின்றனர். கட்டாயப் படுத்தும்போது பிரச்சினை செய்கின் றனர். இந்தக் கருவியில் வாகன ஓட்டிகள் தம் கட்டி ஊதினால் மட் டுமே மது அருந்தினார்களா என கண்டுபிடிக்க முடியும்.
பெரும்பாலும் ஊதுபவர்கள் போலீஸாருக்கு ஒத்துழைப்பதில்லை. மேலும் நீதிமன்றமும், மருத்துவர் அளிக்கும் சான்றிதழை மட்டுமே பரிசீலிப்பதால் சந்தேகப் படும் நபர்களை மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு அனுப்புகிறோம். அதனால், நாங்கள் ப்ரீத் அனலைசர் கருவிகளை தற்போது பயன்படுத்துவதே இல்லை” என்றார்.
லைசன்ஸ் ரத்து செய்யப்படும்
போலீஸார் மேலும் கூறும்போது, “மது குடித்திருப்பதை மருத்துவர் உறுதி செய்தால் அவர் அளிக்கும் சான்றை இணைத்து, மெமோ வழங்கி குற்றப்பத்திரிகையுடன் சம்பந்தப்பட்ட நபர்களை மொபைல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம். அவர்கள் அபராதம் விதிப்பார்கள். தற்காலிகமாக ஆர்.டி.ஓ மூலம், அந்த நபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மீண்டும் இதுபோல அதே நபர் மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டினால், அவரது ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமானவர்கள், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர். அப்போது ஒரே வாகனச் சோதனையில் 300, 400 பேர் சிக்குவர். அவர்கள் அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும்போது, மருத்துவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதால், அவர்களும் அதிருப்தி அடைகின்றனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT