Published : 26 Dec 2022 04:00 AM
Last Updated : 26 Dec 2022 04:00 AM
கோவை: கோவை - மதுரை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கியது. அதன்படி, கோவையிலிருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16721),
இரவு 7.35 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16722), நண்பகல் 12.45 மணிக்கு கோவை வந்தடையும். நேற்றுமுதல் இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் 35 நிமிடங்கள் வரை பயண நேரம் குறைந்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல்-பழநி இடையே ரயிலின் வேகம் 75 கிலோ மீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டராகவும், பழநி-பொள்ளாச்சி இடையே ரயிலின் வேகம் 70 கிலோ மீட்டரில் இருந்து 100 கிலோ மீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய நேர அட்டவணைப்படி, கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16721), கோவையிலிருந்து தினமும் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.35 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16722) நண்பகல் 12.15 மணிக்கு கோவை வந்தடையும்.
இந்த ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழநி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, அக்கரைப்பட்டி, திண்டுக்கல், அம்பாதுரை, கொடைரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயபுரம், கூடல்நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் கோவையிலிருந்து மதுரைக்கு கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தென் மாவட்டங்களுக்கு இணைப்பு: இது தொடர்பாக பயணிகள் கூறும்போது, “மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் மதியம் 1.50 மணிக்கு கோவை வந்தடைகிறது. வரும் வழியில் பெரியநாயக்கன்பாளையம், துடியலூரில் இந்த ரயில் நின்று செல்கிறது. இந்த ரயிலில் பயணிப்போர் மேட்டுப்பாளையம் முதல் மதுரை வரை ஒரே டிக்கெட் எடுத்துவிட்டு, கோவை வந்திறங்கிய பிறகு கோவை-மதுரை ரயிலில் ஏறி பயணிக்கலாம்.
விடுமுறை நாட்களில் கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வோருக்கும், தென்மாவட்டங்களில் இருந்து உதகை வந்து செல்வோருக்கும் இந்த நேர குறைப்பு உதவியாக இருக்கும். அதேபோல, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழநி செல்லும் பக்தர்களுக்கும் இந்த ரயில் உதவியாக உள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT