Published : 26 Dec 2022 06:03 AM
Last Updated : 26 Dec 2022 06:03 AM
சென்னை: மூதறிஞர் ராஜாஜியின் 50-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
ராஜாஜியின் 50-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில், அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் செய்தித்துறை சார்பில், ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், சிறப்பு புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜன.1-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை நேற்று அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.
நிகழ்வில், சென்னை மேயர் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, செய்தித்துறைச் செயலர் ஆர்.செல்வராஜ், செய்தித்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சியை திறந்து வைத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. இதில், ராஜாஜி பல்வேறு தலைவர்களுடன் இருந்த படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
1959-ம் ஆண்டு சுதந்திரா கட்சியை தோற்றுவித்து, அதன் தலைவராக இருந்தார் ராஜாஜி. மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். சென்னை மாகாணத்தின் முதல்வராக 2 முறை பணியாற்றியதுடன், மேற்கு வங்க ஆளுநராகவும் 2 முறை இருந்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அவர், கடந்த 1969-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கும் காரணமாக இருந்தார்.
அவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு, ராஜாஜியின் பேரன் வைத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT