Published : 26 Dec 2022 06:21 AM
Last Updated : 26 Dec 2022 06:21 AM
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருட்களுடன் கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு சார்பில், பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000-ம் ரொக்கம் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
அதேநேரம், கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு, நெய் உள்பட 21 பொருள்கள் பரிசுத் தொகுப்பில் இருந்தன. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் அச்சு வெல்லம் எதிர்பார்க்கும் நிலையில் “சர்க்கரை” என்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
பொங்கல் விழாவை எதிர்நோக்கி செங்கரும்பு விளைவித்த விவசாயிகளும், இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காயும் இடம் பெற வேண்டும் என தென்னை விவசாயிகளும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இடம்பெறவில்லை. எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கம் ரூ.1000-த்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருள்களுடன், கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன் கோரிக்கை:
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழர்களின் தலையாய பண்பாட்டுப் பண்டிகை பொங்கல். குறிப்பாக, விவசாயிகளுக்குதான் பொங்கல் பண்டிகை பெருமகிழ்ச்சியை தரும். தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்குவதாக அறிவித்திருந்தாலும், இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பும் சேர்த்தால், விவசாயிகள் பயன் அடைவர். பொதுமக்களுக்கும் வெளிச்சந்தையில் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது.
மேலும், ரொக்கமாக அறிவித்திருக்கும் ரூ.1,000 போதுமானதல்ல. குறைந்தபட்சம் 2,500 ரூபாயை பொங்கல் பரிசுத் தொகையாக வழங்க முன்வர வேண்டும். கரும்பையும் சேர்த்து வழங்க அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT