Published : 26 Dec 2022 06:32 AM
Last Updated : 26 Dec 2022 06:32 AM

திருவள்ளூரில் ரூ.2 கோடி மதிப்பில் தயாராகி வரும் நூலகம்: அறிவுசார் மைய பணிகள் 70% நிறைவு

கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்ட நிதியில் திருவள்ளூர் ஜெயின் நகரில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.

இரா. நாகராஜ்

திருவள்ளூர்: திருவள்ளூரில் ரூ.1.97 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணியில், 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் ஜனவரி இறுதியில் முடிவுக்கு வரும் என திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்இளைஞர்கள், மற்றும் குழந்தைகளுக்காக மாவட்டந்தோறும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ஏற்கெனவே தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் -ஜெயின் நகரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பணி குறித்து, திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், திருவள்ளூர் மாவட்ட மைய நூலகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

இதனை தவிர்க்கும் வகையில், இளைஞர்கள், குழந்தைகளுக்காக கலைஞர் நகர்ப்புற வளர்ச்சி திட்ட நிதியில், திருவள்ளூரில் ரூ.1.97 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

2,300 சதுர மீட்டர் பரப்பளவிலான இடத்தில், 457 சதுர மீட்டர் பரப்பளவில் இரு தளங்கள் கொண்ட நூலகம் மற்றும் குழந்தைகள் விளையாட்டுடன் கல்வி பயிலும் வகையிலான பூங்கா, வாகன வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

நூலகத்தில், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், பொதுமக்கள் வாசிக்கக் கூடிய வகையில் இலக்கியம், வரலாறு உள்ளிட்ட நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள் இடம்பெற உள்ளதோடு, வாசிப்பறைகள், இணைய தளங்களை பயன்படுத்துவதற்காக 4 கணினிகள் கொண்ட அறை, நூல்களின் முக்கிய பகுதிகளை நகல் எடுக்கும் வசதி உள்ளிட்டவை அமைய இருக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய கட்டுமானம் உள்ளிட்ட 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள மின் இணைப்பு பணிகள், வண்ணம் தீட்டும் பணிகள் வரும் ஜனவரி இறுதிக்குள் முடியும். இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x