Published : 26 Dec 2022 07:09 AM
Last Updated : 26 Dec 2022 07:09 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், 4-வது மற்றும் 5-வதுவழித்தடத்தில் பல்வேறு இடங்களில் உயர்மட்டப்பாதை, மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு வழித்தடங்களில் இதுவரை மொத்தம் 400 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின்கீழ், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை (26.1 கி.மீ) 4-வதுவழித்தடம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ.) 5-வது வழித்தடம் ஆகும்.
இவற்றில், 42.2கி.மீ. தொலைவுக்கு சுரங்கத்திலும், 76.3 கி.மீ தொலைவுக்கு உயர்மட்டத்திலும் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகளை 2026-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 45-க்கும் மேற்பட்ட இடங்களில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், 4-வது மற்றும் 5-வது வழித்தடத்தில் உயர்மட்ட பாதையில் தற்போது பணிகள் தீவிரமாகி உள்ளன. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வழித்தடத்தில் முன்னுரிமை அடிப்படையில், பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பூந்தமல்லியில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரை 16 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட பாதையாகவும், மீதமுள்ள 10.1 கி.மீ. தொலைவுக்குசுரங்கப் பாதையாகவும் அமையஉள்ளது. 18 உயர்மட்ட ரயில் நிலையங்கள், 12 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் எனமொத்தம் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில், உயர்மட்டபாதையில் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கலங்கரை விளக்கம் - பவர்ஹவுஸ் வரை உயர்மட்ட பாதையில் மொத்தம் 816 தூண்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் இதுவரை 283 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
போரூர் சந்திப்பு முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதைக்காக, பல இடங்களில் தூண்கள் அமைத்து, அடுத்த கட்ட பணிகளை தொடங்க உள்ளோம். இதுதவிர, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லைதோட்டம் உள்ளிட்ட பல இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.
இதுபோல,சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, கோடம்பாக்கத்தில் சுரங்க மெட்ரோ ரயில்நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
5-வது வழித்தடம்: மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் அனைத்து இடங்களிலும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் 41.2 கி.மீ. பாதை உயர்மட்டத்திலும், 5.8 கி.மீ. பாதை சுரங்கப்பாதையிலும் அமைய உள்ளது.
சாஸ்திரி நகர், எல்காட், உள்ளகரம், கத்திப்பாரா, ராமாபுரம், முகலிவாக்கம், கோயம்பேடு, ரெட்டேரி சந்திப்பு போன்ற இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பாதையில் 1,622 தூண்களில் இதுவரை 117 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி மாதவரம் பால்பண்ணை பகுதியில் நடைபெற்று வருகிறது. மாதவரம் பால்பண்ணை முதல் மாதவரம் நெடுஞ்சாலை வரை (அப்லைன்) 1,300 மீ தொலைவில் இதுவரை 109 மீட்டருக்கு ரிங்ஸ் (வட்டவடிவில்) அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
பசுமைவழிச் சாலையில் ஜனவரி 2-வது வாரத்தில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT