Published : 26 Dec 2022 04:13 AM
Last Updated : 26 Dec 2022 04:13 AM
மதுரை: மதுரை சுற்றுச்சாலையில் பாண்டிகோயில் அருகே மஸ்தான்பட்டி சுங்கச் சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை உத்தங்குடி-கப்பலூர் வரை யிலான சுற்றுச் சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து மஸ்தான்பட்டி (வண்டியூர் சந்திப்பு அருகே), சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை ஆணையக் கட்டுப்பாட்டில் மதுரை-மேலூர் சாலையில் சிட்டம்பட்டி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் ஆகிய 2 சுங்கச்சாவடிகள் பல ஆண்டுகளாகச் செயல்படுகின்றன.
சென்னை, திருச்சி மார்க்கத்தில் இருந்து விருதுநகர், நெல்லை, கன்னியா குமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள், மதுரை மாவட் டத்தில் சிட்டம்பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, வலையங்குளம், கப்பலூர் என 5 சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், போதிய அடிப்படை வசதியின்றி, மஸ்தான்பட்டியில் இருந்து வலையங்குளம் வரை சுமார் 27 கி.மீ. தூரத்துக்குள் செயல்படும் 3 சுங்கச் சாவடிகளுக்கும் தடைகோரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மஸ்தான்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க மாநில சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக நிர்வாகத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் மஸ்தான்பட்டியில் வாகனங்கள் செல்ல போதிய வழிகளும், அடிப்படை வசதிகளும் செய்திருப்பதாக மஸ்தான் பட்டி சுங்கச்சாவடி நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. இதை ஏற்று இந்த வழக்கை நீதிமன்றம் 3 வாரத்துக்கு முன்பு முடித்து வைத்து கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்தது.
இதையடுத்து மீண்டும் கட்டணம் வசூலிக்க டோல்கேட் நிர்வாகம் நட வடிக்கை எடுத்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பிற சுங்கச் சாவடியை போன்று கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அருகில் உள்ள வண்டியூர், மஸ்தான் பட்டி, கருப்பாயூரணி, ஆண்டார் கொட்டாரம், கல்மேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்பதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே கப்பலூர் சுங்கச் சாவடி யில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிராகப் போராட்டம் நீடிக்கும் நிலையில், மஸ்தான்பட்டியிலும் கட்டணம் வசூலிப்பதால் அப்பகுதி மக்கள் கல்வி நிறுவனங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சுங்கச்சாவடி நிர்வாகத் தினர் கூறியதாவது: நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் கட்டணம் வசூலிக்கிறோம். சுங்கச் சாவடியில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள வாகனங்களுக்கு மாதம் ரூ. 315 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து போகலாம். வாகன ஆர்.சி. புத்தகம், ஆதார் கார்டு நகல்களை அலுவலகத்தில் சமர்ப்பித்து அதற்கான அட்டையைப் பெறலாம் என்றனர்.
இதற்கிடையே கட்டணம் வசூலிப்ப தால் சுற்றுச்சாலையில் வாகன நெருக் கடி ஏற்பட்டுள்ளது. எஸ்.ஐ. ஒருவர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT