Published : 26 Dec 2022 04:15 AM
Last Updated : 26 Dec 2022 04:15 AM

கள்ளக்குறிச்சியில் கபளீகரமாகும் கனிம வளம்: அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் சுரங்கத் துறையினர்

பிரதிநிதித்துவப் படம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கனிமங்களை வெட்டியெடுத்து முறைகேடான வகையில் விற்று, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாக சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டை வட்டம் பச்சைவேலி கிராமம், பழைய விமான ஓடுதளம் அருகே விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாகவந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது, அதில் கூழாங்கற்கள் உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில், கூழாங்கற்களுடன் லாரிபறிமுதல் செய்யப்பட்டு உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்ப டைக்கப்பட்டது. இதற்கிடையில் லாரி ஓட்டுநர் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய வட்டங்களில் உரிய அனுமதியின்றி கூழாங்கல் மற்றும் கருங்கல்குவாரிகள் இயங்கி வருவதாகவும், இவையனைத்தும் வருவாய், காவல்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் அறிந்தும் அவற்றை கண்டும் காணாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உதாரணமாக, உளுந்தூர்பேட்டை வட்டத்திற்குட் பட்ட மதியனூர், ஒடப்பன்குப்பம், மட்டிகை, சேந்தநாடு, சேந்தமங்கலம் பகுதியில் நிலத்துக்கடியில் கூழாங்கல் குவாரிகளும், திரு பெயர், எடைக்கல், பு.மலையனூர், சித்தாத்தூர், புதுக்கேணி பரிந்தல் ஆகிய பகுதிகளில் கருங்கல் குவாரிகளும் உள்ளன.

இதேபோல் கள்ளக்குறிச்சி கோட்டம் சங்கராபுரம் கோட்டத்திற்குட்பட்ட மூக்கனூர், மல்லாபுரம், பரமநத்தம், மூங்கில் துறைப்பட்டு, திருக்கங்கனூர், குடாரம், கடவனூர், சின்னசேலம் வட்டத்திற்குட்பட்ட கச்சிராயப்பாளையம், எறையூர், திருக்கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட கரடி ஆகிய பகுதிகளில் கருங்கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் சில பகுதிகள் பட்டா நிலத்திலும், பெரும்பாலானவை காப்புக்காடுகளிலும், அரசு புறம்போக்கு நிலத்திலும் உள்ளன. உளுந்தூர்பேட்டை வட்டத்தில் மதியனூர் குவாரிக்கு அனுமதி பெற்றுக் கொண்டு, இதர ஊராட்சிகளில் காப்புக் காடுகளிலும், அரசு புறம் போக்கிலும் கூழாங்கல் வெட்டியெடுத்து விற்பனை செய்வது தொடர்கிறது.

இதேபோல் கல்வராயன் மலையில் கள்ளிப்பாறை பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள கருங்கல்லையும் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் வெட்டியெடுத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு கனிமவள நிறுவன ஊழியர் சங்க பொதுச் செயலாளர் விஜயன் கூறுகையில், “2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் கனிமவளம் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.1,100 கோடி மட்டுமே. ஆனால் இதனை வாடகைக்கு எடுத்தவர்கள் ஈட்டிய தொகையோ பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்.

ஒரு குவாரியில் 5 நடைக்கு மட்டுமே அனுமதி பெற்று, அதற்குரிய தொகையை மட்டுமே செலுத்தி தங்களின் வருவாயை பெருக்கிக் கொள்கின்றனர். மக்கள் நலத்திட்டங்களுக்கு உதவ வேண்டிய வருவாய் துறையினரும், சுரங்கத் துறையினரும் கனிமவளக் கொள்ளைக்கு துணைபோகும் நிலை நீடிக்கிறது.

இதை அரசு கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான்கனிமவளக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்றார். இது தொடர்பாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் உதவிப் புவியியலாளர் பாலசுப்ரமணியன் ஆகிய இருவரை யும் தொடர்பு கொண்டபோது, அவர்கள் இருவரும் பேச முன் வரவில்லை. காப்புக் காடுகளிலும், அரசு புறம் போக்கிலும் கூழாங்கல் வெட்டிஎடுக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x