Published : 02 Dec 2016 01:27 PM
Last Updated : 02 Dec 2016 01:27 PM

சென்னை பெருமழை முதல் பருவநிலை மாற்றம் வரை: ரமணன் சிறப்பு பேட்டி

மழைக்காலங்களில் மழையை எதிர்பார்த்ததைவிட ரமணனை எதிர்பார்த்ததே அதிகமாக இருக்கும். காரணம் ரமணன் தொலைக்காட்சியில் தோன்றுவாரா, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவார்களா என்ற ஆர்வ மிகுதி.

வானிலை ஆய்வுகள், தொலைக்காட்சி அறிவிப்புகள், கருத்தரங்குகள், தபால் தலை, நாணயம் சேகரிக்கும் வழக்கம், தனிப்பட்ட வாழ்க்கை என பரபரப்பாகத் தன் வாழ்க்கையைக் கழித்த சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தற்போது என்ன செய்கிறார்?

கடந்த ஆண்டு சென்னையை புரட்டிப் போட்ட பெருமழை தொடங்கி தற்போதைய பருவநிலை மாற்றம் வரையிலான கேள்விகளுக்கு ரமணன் அளித்த பதில்கள்.

ஓய்வுக்குப் பின் எப்படி உணர்கிறீர்கள்?

மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் இருக்கிறேன். நாட்கள் உற்சாகமாகக் கழிகின்றன. வாழ்க்கையை நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறேன். இப்போது கூட ஒரு பள்ளி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்திருக்கிறேன்.

சென்னை டிசம்பர் 2015, உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தருணம் அது. சரியாக ஒரு வருடம் கழிந்திருக்கிறது. இந்த டிசம்பர் எப்படி இருக்கும்? இந்த வருட மழை வாய்ப்பு குறித்து...

நேற்று(வியாழக்கிழமை) 10 செ.மீ. அளவில் மழை பொழிந்துள்ளது. இன்று மழையளவு குறைந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த வருடம் சராசரியான 44 செ.மீ. மழை கிடைக்குமா என்பதே சந்தேகம் தான்.

மாணவர்கள், இளைஞர்கள், நெட்டிசன்கள் உங்களை மிஸ் பண்ணுவதாகக் கூறுகிறார்களே?

(சிரிக்கிறார்)... நான் வாட்ஸ் அப், ட்விட்டர், ம்ம்... ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் நான் யாரையும் மிஸ் பண்ணவில்லை. மக்களை நேரில் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். மாணவர்களுடன் கலந்துரையாடுகிறேன்.

மாணவர்களிடையே வானிலை குறித்த புரிதல், ஆர்வம் இருக்கிறதா?

ஆம். அவர்கள் ஆர்வத்துடன் வந்து பேசுகிறார்கள். வானிலை, அறிவியல் குறித்து நிறையக் கேள்விகள் கேட்கிறார்கள். தங்கள் சந்தேகங்களைப் போக்கிக்கொள்கிறார்கள்.

வானிலையில் தமிழைப் புகுத்தியதில் உங்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. இப்போது இருக்கும் வானியலாளர்கள் மக்களிடம் தமிழை முறையாகக் கொண்டு சேர்க்கிறார்களா?

ஆம். சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நல்ல தமிழில் தகவல்களைத் தந்துகொண்டிருக்கிறார். அவரின் சொல்லாடல்கள் சிறப்பாக இருக்கின்றன.

தனிப்பட்ட முறையில் எடுக்கப்படும் வானியல்கள் தரவுகளின் துல்லியத்தன்மை எப்படி இருக்கிறது? அவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அவற்றின் துல்லியத்தன்மை மாறுபட வாய்ப்புகள் அதிகம்.

தனிப்பட்ட வானியலாளர்கள் வானிலை என்றால் என்ன, காலநிலை என்றால் என்ன என்பது குறித்துப் பேசலாம். ஆனால் அவர்கள், வானிலை எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்டவைகளை வெளியிடக்கூடாது. இதனால் பொது மக்களிடையே பதற்றம்தான் அதிகமாகும்.

வானிலை அறிவிப்புகளை வெளியிடுவதற்கென தனியாக அரசு வானிலை மையம் உள்ளது. அப்படியிருக்கும்போது வானிலை குறித்து அறிக்கைகள் நான் தனிப்பட்ட முறையில் இப்போது வெளியிட்டால் அது தவறுதான். அதற்காகத்தானே அரசாங்கம் பாலச்சந்திரனை நியமித்திருக்கிறது.

' ரமணன் சாரின்' ஓய்வுக்குப் பிறகு மழையும் ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டது என்று சமூக ஊடகங்களில் கூறப்படுகிறதே?

(சத்தமாகச் சிரிக்கிறார்)... ஏன் நேற்று கூட நல்ல மழை பெய்ததே...?

தமிழகத்தின் குடிநீர்த்தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறதே. இதுகுறித்து மூத்த வானியலாளரான உங்களின் பார்வை என்ன?

பொதுவாக மழையை மட்டுமே நம்பி குடிநீர்த் தேவை அமைவதில்லை. மக்கள் தொகை பெருகிக்கொண்டிருக்கும் சூழலில் தண்ணீரின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இயல்பாக மழை பெய்தால்கூட தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்ற சூழலில் இயற்கையிடம் மிகுதியாக மழை பெய்யச் சொல்லி நம்மால் கேட்க முடியாது.

குடிநீர்த்தேவையைப் போக்க நிறைய வழிகள் இருக்கின்றன. கடல்நீரைக் குடிநீராக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. குறிப்பிட்ட துறை நிபுணர்களே குடிநீர்த்திட்டங்களை முறையாகத் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

ஐப்பசியில் வெயில் அடிக்கிறது. மார்கழியில் மழை பெய்கிறது. பருவமழை காலம் தவறிப் பொழிகிறது. பருவநிலை மாற்றம் கவலை அளிக்கிறதே...

பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவில் மாற்றம் இருக்காது. ஆனால் பூமியின் வெப்பநிலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறையே அதைக் கட்டுப்படுத்தும். இயற்கையைக் காக்க அரசு சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன். மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x