Published : 26 Dec 2022 04:17 AM
Last Updated : 26 Dec 2022 04:17 AM
தஞ்சாவூர்: தமிழகத்தில் முதன்முறையாக வேளாண் வணிகத் துறை சார்பில் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அச்சுவெல்லம் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதியில் அச்சுவெல்லம் தயாரிப்பதற்காக, நிகழாண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் இந்தக் கரும்பைக் கொண்டு, விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களிலேயே பாகு காய்ச்சி, அச்சுவெல்லம் உற்பத்தி செய்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லத்தை, திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள வெல்ல மண்டிகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், அச்சுவெல்லத்துக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதால், தமிழக அரசே கொள்முதல் செய்து, பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு திட்டத்தில் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக வேளாண் வணிகத் துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அச்சு வெல்லத்தை ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று அச்சுவெல்லம் ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் பங்கேற்க பாபநாசம், திருவையாறு பகுதிகளில் உள்ள அச்சுவெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், உள்ளூர், வெளியூர் வியாபாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு செயலாளர் சுரேஷ்பாபு, ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி முன்னிலையில் அச்சுவெல்லம் ஏலம் தொடர்பாக, விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதுகுறித்து வேளாண் வணிகத்துறையினர் கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏற்கெனவே பருத்தி, உளுந்து, பயறு உள்ளிட்ட தானியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது தமிழகத்தில் முதன்முறையாக, பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று அச்சுவெல்லம் ஏலம் விடப்பட உள்ளது. இதனால் அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.
இது குறித்து அச்சுவெல்லம் உற்பத்தி செய்யும் மாகாளிபுரம் பிரகாஷ் கூறியது: விவசாயிகள் குடிசைத் தொழிலாக உற்பத்தி செய்யும் அச்சுவெல்லத்தை விற்க பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது அரசே இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் அச்சு வெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏலத்தின் மூலம் கூடுதல் விலை கிடைக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT