Last Updated : 25 Dec, 2022 08:01 PM

33  

Published : 25 Dec 2022 08:01 PM
Last Updated : 25 Dec 2022 08:01 PM

பொய் தகவல் பரப்பும் பாஜகவினருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி: உதயநிதி

கோவை கொடிசியா மைதானத்தில்  நடந்த அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உடன், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர். | படங்கள்:ஜெ.மனோகரன்.

கோவை: பொய் தகவல் பரப்பும் பாஜகவினருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொடிசியா மைதானத்தில் இன்று (டிச.25) நடைபெற்றது. மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில், ரூ.229.83 கோடி மதிப்பிலான 1,115 முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.790.41 கோடி மதிப்பீட்டிலான 5,936 புதிய திட்டப்பணிகளுக்கு அரவ் அடிக்கல் நாட்டினார். 25,042 பயனாளிகளுக்கு ரூ.368.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உடன், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர்.

பின்னர் அவர் பேசியதாவது: ''தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளாக அரசு நிர்வாகம் செயலற்று கிடந்தது. கோவையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி இதுவரை 1,57,575 மனுக்களுக்கு அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தீர்வு கண்டுள்ளார். மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகம் மூலம் 13,37,679 மனுக்கள் பெறப்பட்டு 13,29,565 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கோவையில் சுமார் 1,70,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 1,63,000 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.1,600 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் கோவைக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிக நலத்திட்டங்களை பெற்ற மாவட்டமாக கோவை திகழ்கிறது. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதிமுகவினராக, பாஜகவினராக, பாஜகவில் வாட்ஸ்-ஆப் மூலம் பொய் செய்தியை பரப்புபவராக கூட இருக்கலாம். அவர்களுக்கும் எல்லாம் சென்று சேர வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. முதல்வரையும் திராவிட மாடல் ஆட்சியையும் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.

திராவிட மாடல் ஆட்சி: முன்னதாக, மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசும்போது, ''திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் பேசச் செய்துள்ளார் முதல்வர். கடந்த ஆண்டுகளில் கோவை வளர்ச்சி பெற்றதை விட, இந்த ஐந்து ஆண்டுகளில் கோவை இரண்டு மடங்கு வளர்ச்சி பெறும். அன்னூர் தொழிற்பூங்கா அமைப்பது தொடர்பாக, சில அரசியல் கட்சியினர் விவசாயிகளிடம் தவறான தகவல்களை பரப்புகின்றனர். வேளாண் விளை நிலங்களை கட்டாயப்படுத்தி அரசு எடுக்காது. விரும்புகின்ற விவசாயிகள் நிலங்களை வழங்கலாம். மீதம் கார்ப்ரேட் நிறுவனங்களின் நிலங்களை அரசு எடுத்து தொழிற்பூங்காவை அமைக்கும்,'' என்றார்.

இக்கூட்டத்தில், எம்.பிக்கள் பி.ஆர்.நடராஜன் (கோவை), கு.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.6.55 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x