Published : 25 Dec 2022 07:15 PM
Last Updated : 25 Dec 2022 07:15 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,340 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன்பவார் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் பாரதி பிரவீன்பவார் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரியின் சுகாதாரத்துறை செயல்பாடுகளை ஆய்வு செய்தேன். பிரசவத்தின்போது குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கரோனா பாதிப்பின்போது உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.300 கோடியளவுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்தது. ஆய்வகம், ஐசியூ உள்ளிட்டவற்றை மேம்படுத்த இத்தொகை பயன்படுத்தப்பட்டது.
புதுச்சேரியில், பிரதமர் மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் 6 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இவர்களில் 29 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். ஜிப்மருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி வழங்கி வந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.1,340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தொற்றுநோய்களுக்காக சிறப்பு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் கொண்டு சிறப்பு மருத்துவமனை அமைக்க கருத்துருவை புதுச்சேரி அரசு அனுப்பினால் நிதி தரப்படும். அதேபோல் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டால் நிச்சயம் அதற்கும் நிதி தரப்படும்" என்று தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சரடன் சேர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு தனித்தனியாக நிதி ஒதுக்குகிறது. நடப்பு நிதியாண்டில் ஊதியத்துடன் சேர்த்து சுகாதாரத் துறைக்கு ரூ.1040 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT