Last Updated : 25 Dec, 2022 06:24 PM

 

Published : 25 Dec 2022 06:24 PM
Last Updated : 25 Dec 2022 06:24 PM

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பழுதாகி நிற்கும் 13 ஆம்புலன்ஸ்கள் - ஆளுநர் மற்றும் முதல்வரிடம் புகார்

கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 13 ஆம்புலன்ஸுகள் பழுதடைந்து பயன்படாமல் இருப்பதால் ஏழை நோயாளிகள் சிரமங்களைச் சந்தித்து வருவது குறித்து ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைகளில் இறந்தவர்களின் சடலங்களை எடுத்துச்செல்ல அரசு ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும், மேல்சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லவும் ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளது. மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பும்போது, தனியார் ஆம்புலன்ஸ்சுகளின் செல்போன் எண்களை கொடுத்து அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அரசு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிப்பதாக நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் கூறுகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் எத்தனை ஆம்புலன்சுகள் பயன்பாட்டில் உள்ளன, அதற்காக பணிபுரியும் ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார் புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி. அரசு அளித்துள்ள விவரங்கள் குறித்து தெரிவித்துள்ள ரகுபதி, "புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் உள்ள 8 ஆம்புலன்சுகளில் 5 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. 3 ஆம்புலன்சுகள் பழுதடைந்துள்ளன. இதற்கு 9 ஓட்டுநர்கள் உள்ளனர்.

இதுபோல் ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள 11 ஆம்புலன்சுகளில் 4 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 6 ஆம்புலன்ஸ்கள் பயன்படாமல் உள்ளன. கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தில் உள்ள 4 ஆம்புலன்ஸ்களில் ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 3 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் இல்லை. மண்ணாடிப்பட்டில் ஒரு ஆம்புலன்ஸ் பயன்பாடு இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், அரசு அளித்த தகவலின்படி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 13 ஆம்புலன்சுகள் பழுதாகி செயல்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ்கள் வழங்கப்படுவதில்லை.

அரசு பொதுமருத்துமனைகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள்தான். அவர்கள் ஆம்புலன்ஸ் கேட்கும்போது வழங்காமல் அலைக்கழிப்பதும், தனியார் ஆம்புலன்சை நாடச் சொல்வதும் கண்டனத்திற்குரியது. புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் 11 மாதங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 753 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படாதது மட்டும் இதற்கு காரணமல்ல, மேல் சிகிச்சைக்குச் செல்ல நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வழங்காததும் முக்கிய காரணம்.

எனவே, அரசு பொது மருத்துவமனைகளில் உள்ள ஆம்புலன்சுகள் அனைத்தையும் சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடமும் முதல்வர் ரங்கசாமியிடமும் மனு அளித்துள்ளேன்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x