Published : 25 Dec 2022 02:31 PM
Last Updated : 25 Dec 2022 02:31 PM
சென்னை: ''நூறாண்டு கடந்து வாழ்வாங்கு வாழ்க'' என்று 98வது பிறந்தநாளில் அடியெடுத்துவைக்கும் நல்லகண்ணுவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவருமான முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு 98 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கண்டு அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். 25 ஆண்டுகள் விவசாய தொழிலாளர் சங்கத் தலைவராகவும், 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் சிறப்பாக கடமையாற்றிய அண்ணன் நல்லகண்ணு, பல்வேறு அடக்குமுறைகளை, சிறை தண்டனைகளை எதிர்கொண்ட போராளித் தலைவர் ஆவார்.
நெல்லை சதி வழக்கில் அவரைச் சிக்க வைத்து, அவருக்கு விலங்கு மாட்டி சித்ரவதை செய்து, அவரது மீசையையும், கன்னத்தையும் தீயிட்டுப் பொசுக்கி காவல்துறை வெறித்தனமாக நடந்துகொண்டதைக் கண்டு அவரது தாயார் மயக்கம் போட்டு கீழே சரிந்து விழுந்தார். இவரை மலை உச்சிக்குக் கொண்டு சென்று கீழே உருட்டித் தள்ளி கொலைசெய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டினார்கள். இவைகளுக்கெல்லாம் வளைந்து கொடுக்காமல், பாறையைப் போல துணிச்சலுடன் அந்த அடக்குமுறைகளை எதிர்கொண்ட தியாக வேங்கைதான் தோழர் நல்லகண்ணு.
அவரின் 80 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவின்போது, அவருக்காக கட்சி திரட்டிக் கொடுத்த ஒரு கோடி ரூபாய் நன்கொடையை கட்சிக்கே திருப்பி அளித்தார். தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனத் தலைவர் அருணாசலம் கொடுத்த காரையும் கட்சிக்கே வழங்கினார். தமிழக அரசு அளித்த அம்பேத்கர் விருதுடன் கொடுத்த ஒரு லட்சம் ரூபாயையும் கட்சிக்கும், விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் அன்பளிப்பாக வழங்கினார். அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தகைசால் தமிழர் விருது அளித்து 15 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியபோது, அந்தத் தொகையுடன் தனது பங்காக 5 ஆயிரத்தையும் சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கே வழங்கினார் அண்ணன் நல்லகண்ணு.
நதிநீர் உரிமைகளுக்காகவும், சுற்றுச் சூழலைக் காப்பாற்றவும், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் தொடர்ந்து போராடிக் கொண்டு வருபவர் தோழர் நல்லகண்ணு. இத்தகைய அரும்பெரும் குணங்களை பெற்று, தமிழகத்தின் மூத்த தலைவராக திகழ்ந்து, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் அண்ணன் நல்லகண்ணு நூறாண்டுகளையும் கடந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.’’
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT