Published : 25 Dec 2022 03:51 AM
Last Updated : 25 Dec 2022 03:51 AM
சென்னை: உலகமெங்கும் ஆண்டுதோறும் இயேசு பிறந்த தினமான டிச. 25-ம்தேதி (இன்று), கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக அன்புடனும், இரக்கத்துடனும் பூமியை ஆசீர்வதித்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறோம். கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் திருநாளில் அன்பைப் பரிமாறி மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் நமதுஅரசு, கிறிஸ்தவ மக்களின் சமூகபொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியோடு இருக்கிறது. அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறக்க இயேசுவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்.
அதிமுக இடைகால பொதுச்செயலாளர் பழனிசாமி: மனித வாழ்க்கையில் நம்பிக்கை எனும்சக்தியை பெற்றுவிட்டால் இவ்வுலகில் முடியாதது எதுவும் இல்லை என்ற இயேசுவின் போதனைப்படி செயல்பட்டால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். மக்களுக்கு என் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அன்பின் சிறப்பை, அன்பின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்த இயேசு பிறந்த நாளன்று நாமும் அன்பை விதைப்போம். அன்பால் உலகை ஆள்வோம். அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை போன்ற வாழ்க்கை நெறிகளை பின்பற்றி ஒற்றுமையாக வாழ்வோம். அனைவரது வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என வாழ்த்தி எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இயேசுவின் பிறந்த தினம் இன்று. அன்பையும், சகோதரத்துவத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே போதித்து அதிசயம் நடத்தியவர். அவரது பிறந்தநாளில் அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி: கிறிஸ்தவ சமுதாயத்தைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வது தான் முதன்மை நோக்கமாகும். சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மனிதர்களுக்கு மன்னிக்கக் கற்றுக்கொடுத்த மகான் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயேசுபிரான் விரும்பியதைப் போல உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இயேசு கிறிஸ்து போதித்த மனிதநேய நெறிகளைப் பின்பற்றி, சாதி-சமய வேற்றுமைகளைக் கடந்து சகோதரத்துவம் மேலோங்க கிறிஸ்துமஸ் திருநாளில் உறுதி கொள்வோம். கிறிஸ்தவப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி: இந்த உலகில் இருப்பவர்கள் அனைவரும், இல்லாதவர்களுக்கு உதவிகளை வாரி வழங்குவோம். இதன் மூலம் இயேசு விரும்பிய அமைதி, கருணை, ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருக உறுதியேற்போம் என்று கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: இயேசு பெருமான் பிறந்த நாளான இப்பெருநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சகோதரத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் துணை நிற்கும் என்று கூறி கிறிஸ்துமஸ் பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உலகெங்கும் அன்பின் நற்குணத்தை போதித்தவர் இயேசுநாதர். அவரின் சொற்களை மனதில் நிறுத்தி அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். உலகெங்கும் அமைதி நிலவி, மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ கிறிஸ்துமஸ் நாளில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT