Published : 25 Dec 2022 04:25 AM
Last Updated : 25 Dec 2022 04:25 AM
கிருஷ்ணகிரி: முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சான்றிதழ் பெற வழிகாட்டுதல்கள் இல்லாததால், விண்ணப்பிக்க முடியாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழக அரசின் மனித வள மேலாண்மைத் துறையின் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி அரசாணை(நிலை) எண்:122 வெளியிடப்பட்டது. அதில், வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் முன்னுரிமை முறையினை மறுசீரமைப்பு செய்து, கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், அதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் வழியாக பெறலாம். அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கான சான்றிதழ்கள், தொடர் புடைய பள்ளிகளின் தலைமை யாசிரியர்களின் மூலம் பெறலாம் என்கிற நடைமுறையும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கான சான்றிதழ்கள் பெற விரிவான வழிகாட்டுதல்கள், விண்ணப்பிக்கும் முறை, இடம்பெறவில்லை. இதனால் இச்சான்றிதழ்களை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை முதல் தலைமுறை பட்டதாரிகள் கடந்த ஒரு ஆண்டாக சந்தித்து வருகின்றனர்.
புரிதலும் தெளிவாக இல்லை..: இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்களை பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் முறை இல்லை. வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டால், எங்களுக்கு இன்னும் வழிகாட்டுதல்கள் வரவில்லை. மேல் நிலை கல்வி முடித்து, உயர்கல்வி சேரும் மாணவ, மாணவிகள் சலுகைகள் பெற இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் முறை மட்டுமே நடைமுறையில் உள்ளது, என்கின்றனர்.
உயர்கல்விக்கு வழங்கப்படும் முதல் பட்டதாரி சான்றிதழுக்கும், அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு அளிக்கப்படும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழுக்குமான புரிதலும் தெளிவாக இல்லாததால் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வதிலும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால் அரசுத்துறையில் பல்வேறு பணிகளுக்கு வேலை வாய்ப்பகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிவிட்டு, தங்களது முதல் தலைமுறை பட்டதாரி என்ற முன்னுரிமை சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், மனிதவள மேலாண்மை துறை, வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்டவற்றை ஒருங் கிணைக்காமல் விட்டதால், இச்சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்கள் இ-சேவை மையங்கள் மூலம் பெறுவதற்கான வசதிகளையும், வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்த வேண்டும், என்றனர். வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகள், உரிய வழிமுறைகள் எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT