Published : 25 Dec 2022 04:11 AM
Last Updated : 25 Dec 2022 04:11 AM

இஎஸ்ஐ-யில் 2 ஆயிரம் மருத்துவர்கள் உட்பட 6,400 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - மத்திய அமைச்சர் தகவல்

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பங்கேற்று பட்டம் வழங்கினார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஷஷாங்க் கோயல், இஎஸ்ஐ பொது இயக்குநர் ராஜேந்திர குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.

சென்னை: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு புதிய வசதிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிநேற்று சென்னை கே.கே.நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர யாதவ் தலைமை தாங்கினார். அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நவீன எக்ஸ்ரே கருவியான டிஜிட்டல் ரேடியோ ப்ளூரோஸ்கோப்பி, திறன்கள் ஆய்வகம், குழந்தைகள் காப்பகமான மலரும் மொட்டுக்கள், உணவு மற்றும் ஓய்வுக்கூடம், ‘ஒரு மாணவர்-ஒரு மரம்’ திட்டம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய கல்வியாண்டுகளில் படித்து முடித்த 179 மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு பட்டப் படிப்புக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மத்திய அமைச்சர் பூபேந்தர யாதவ் வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் பூபேந்தர யாதவ் பேசியதாவது: புதிய தலைமுறை மருத்துவர்கள் நாளைய இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி உடையவர்கள். இங்கு பட்டம் பெறும் மாணவர்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடர்புடைய பணியை மேற்கொள்ள உள்ளனர். இஎஸ்ஐ திறமையான இளம் மருத்துவர்களைக் கொண்டு, நாட்டு மக்களுக்குச் சிறந்த வசதிகள், தொழில்நுட்ப உதவியுடன் சிகிச்சைகளை அளித்து வருகிறது.

இஎஸ்ஐ-யில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உட்பட 6,400 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் 23 புதிய 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் 60-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தியாவில் 3 நகரங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ‘கேத் லேப்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாராமெடிக்கல் வேலைகளுக்குத் திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் 10 துறைகளில் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதேபோல் தொழிலாளர்களுக்கு மருத்துவச் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 153 வெளி நோயாளிகள் உட்பட 5 லட்சத்து 76 ஆயிரத்து 329 பயனாளிகள் இந்தக் கல்லூரியில் பயன்பெற்றுள்ளனர்.

தொழிலாளர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்ற நிலை மாறி, இப்போது தொழிலாளர்களின் பணியிடங்களுக்கு இஎஸ்ஐ சென்று சேவை புரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஷஷாங்க் கோயல், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், இஎஸ்ஐ பொது இயக்குநர் ராஜேந்திர குமார், இஎஸ்ஐ மருத்துவ ஆணையர் அன்ஷு சாப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x