Published : 25 Dec 2022 04:05 AM
Last Updated : 25 Dec 2022 04:05 AM
சென்னை: சுயமரியாதை, சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய ‘கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு’ நூலின் தமிழ்ப் பதிப்பு மற்றும் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய ‘திராவிடமும் சமூக மாற்றமும்’ நூலின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று மாலை நடந்தது. இரண்டு நூல்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
‘கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு’ நூலின் முதல் பிரதியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், ‘திராவிடமும் சமூக மாற்றமும்’ நூலின் முதல் பிரதியை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் பெற்றுக் கொண்டனர். ‘இந்து’ என்.ராம், நூல்களின் ஆசிரியர்கள் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஜெ.ஜெயரஞ்சன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, வஉசி நூலக நிறுவனர் கவிஞர் இளையபாரதி, மாநில திட்டக்குழு முழு நேர உறுப்பினர் ராம.சீனிவாசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கருணாநிதி வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் அவர்மீதான விமர்சன பார்வையுடன் ‘கலைஞர் மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு’ நூல் அமைந்திருக்கிறது. குறிப்பாக, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் நிலைப்பாடு விரிவாக எழுதப்பட்டுள்ளது.
தான் இதுவரை எழுதிய கட்டுரைகளை மொழி பெயர்த்து ‘திராவிடமும் சமூக மாற்றமும்’ என்னும் நூலாக ஜெயரஞ்சன் உருவாக்கியுள்ளார். திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான். சமூக மாற்றம் என்றாலே திராவிடத்தால் விளைந்ததுதான். சமூக நீதிக்கும் மதச்சார்பின்மைக்கும் சுயமரியாதைக்கும் மொழி, இன உரிமைக்கும் ஆற்றல் என்றும் அற்றுப் போகாது என்பதன் அடையாளம்தான் திராவிட மாடல் ஆட்சி. சுயமரியாதை, சமதர்ம அரசியலை எந்நாளும் உயர்த்திப் பிடிப்போம். தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்திலும், ஆங்கில புத்தகங்களை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
‘இந்து’ என்.ராம் பேசும்போது, “திராவிட இயக்கம், திமுக பற்றியும், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரை பற்றியும் ஏராளமான கட்டுரை, புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், கருணாநிதி குறித்து பல பரிமாண அணுகுமுறையோடு எழுதப்பட்டிருப்பதே இந்த புத்தகத்தின் சிறப்பு. சமூக நீதியோடு வளர்ச்சி பெற வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் சமூக மாற்றத்துக்கான இயக்கத்தை கருணாநிதியைவிட சிறப்பாக யாராலும் வழிநடத்தியிருக்க முடியாது. அதே பாதையில் பயணிக்கும் நம் முதல்வருக்கும் வாழ்த்துகள்” என்றார். சமூக நீதிக்கும் மதச்சார் பின்மைக்கும் சுயமரியாதைக்கும் மொழி, இன உரிமைக்கும் ஆற்றல் என்றும் அற்றுப் போகாது என்பதன் அடையாளம்தான் திராவிட மாடல் ஆட்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT