Published : 24 Dec 2022 07:58 PM
Last Updated : 24 Dec 2022 07:58 PM
திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பு, வடமாநிலத் தொழிலாளர்களை கவரும் வகையில், ’வேலைக்கு ஆட்கள் தேவை’ என்ற பிரமாண்ட பதாகை வைக்கப்பட்டிருப்பதால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் சமீப நாட்களாக ஆர்டர்கள் குறைந்து, தற்போது இங்கிருப்பவர்களுக்கே போதிய வேலை இல்லை என்ற சூழல் நிலவுவதாக தொழில் துறையினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் ரயில் நிலையம் முன்பு, ’வேலைக்கு ஆட்கள் தேவை’ என இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழியில், ’வேலைக்கு ஆள் வேண்டும்’, நுற்பாலை, டையிங், காம்பேக்ட்டிங், எம்ராய்டரி, கோழிப் பண்ணை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை எனவும் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் வரை, மாத ஊதியம் வழங்கப்படும் என தொடர்பு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பர பதாகை வைக்கப்பட்டிருப்பதை பலரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். தமிழகத் தொழிலாளர்களை, திருப்பூரில் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பனியன் தொழிற்சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் (ஏஐடியூசி) என்.சேகர் கூறியதாவது: "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நாள்தோறும் திருப்பூர் நோக்கி வேலைவாய்ப்பு தேடி தொழிலாளர்கள் அதிக அளவில் வந்த் கொண்டுதான் இருக்கிறார்கள். அதேசமயம் பின்னலாடை வேலைவாய்ப்புகள் அவர்களுக்கு போதிய அளவில் தர வேண்டும் என்ற கருத்து இருந்து வருகிறது. அதற்கான முன்னுரிமையை நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டும். ஆனால், சில நிறுவனங்கள் வடமாநிலத் தொழிலாளர்களை மொத்தமாக வேலைக்கு சேர்த்துவிடும்போது, கமிஷன் தொகை உள்ளிட்டவை வழங்குவதால், முகவர்களும் இந்த வேலையை செய்கின்றனர்.
ஏற்கனவே வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வந்துவிட்டதால், இங்கிருப்பவர்களுக்கு வேலை இல்லை என்ற பேச்சுகள் இருந்துவரும் நிலையில், முழுவதும் இந்தியில் வைக்கப்பட்ட பதாகை, உழைப்பை நம்பி திருப்பூர் வரும் தமிழகத்தின் பிற பகுதி தொழிலாளர்களிடையே ’வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்’ உள்ளது. தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் விளம்பர பதாகை வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல், முழுக்க இந்தியில் வைத்திருப்பதை ஏற்கமுடியாது. பதாகை வைக்க அனுமதி அளித்த, ரயில்வே நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும்" என்றார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்டிடத் தொழிலில் இருந்து பனியன் நிறுவனம் வரை தமிழகத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு, வடமாநிலத் தொழிலாளர்களுக்கே வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதைபோல உள்ள இந்த இந்தி விளம்பரத்தை ரயில்வே நிர்வாகம் அகற்றவில்லை என்றால், இன்று (டிச.25) தந்தைபெரியார்திராவிடர் கழகத்தின் சார்பில் அகற்றப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.க.செல்வராஜ் கூறும்போது, "முழுக்க இந்தியில் விளம்பர பதாகை யார் வைத்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் பேசி, அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT