Published : 24 Dec 2022 04:30 PM
Last Updated : 24 Dec 2022 04:30 PM
சென்னை: மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவில், தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த அரங்கில், தனியார் நிறுவனம் ஒன்றை பிரபலப்படுத்தக்கூறி, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா பட்டங்களை வென்ற மீரா மிதுனிடம், தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி என்பவர் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், இந்த நிகழ்ச்சி ரத்தானதால் அந்த பணத்தை மீரா திரும்பத்தரவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது 2019-ம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், "நடிகை மீரா மிதுன் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளன. மேலும் தற்போது தலைமறைவாகி உள்ள அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT