Published : 24 Dec 2022 06:22 AM
Last Updated : 24 Dec 2022 06:22 AM
சென்னை: தமிழகத்திலுள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும்பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்வது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனாதடுப்பு, முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக,மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. காணொலிக் காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக் கினார்.
கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று தினசரி 10-க்கும் குறைவாக உள்ளது. தினசரிகண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. புதிய மாறுபாடுகளைக் கண்டறிதல் மற்றும் தொற்று மாதிரிகளை மாதந்தோறும் முழு மரபணு வரிசைப்படுத்துதல் ஆகிய பரிசோதனை ஆய்வக வசதிகள் தமிழகத்தில் உள்ளன.
தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க அனைத்து கரோனா பாசிடிவ் மாதிரிகளும் முழு மரபணு வரிசைப்படுத்துதல் முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. சீனா,ஹாங்காங், ஜப்பான், பிரேசில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தற்போது கரோனாதொற்று அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தயார்நிலை குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையில் கடந்த 21-ம் தேதி உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலுள்ள 4 சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு வருகிறது. உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா தொற்று கண்டறியப்பட்டால் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா பரிசோதனை, பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஒருங்கிணைந்து திறம்பட செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலுள்ள 4 சர்வதேச விமான நிலையங்களிலும் டிசம்பர் 23-ம் தேதி முதல்(நேற்று) சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்த பின்னரே. அவர்கள் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதில், யாருக்காவது கரோனா தொற்று கண்டறியப்பட்டால், நிலையான நெறிமுறைகளின்படி சிகிச்சைஅளிக்கப்படுகிறது. கரோனாபரவுதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி கடைப்பிடித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல்போன்ற தடுப்பு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT