Published : 24 Dec 2022 06:28 AM
Last Updated : 24 Dec 2022 06:28 AM
சென்னை: விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை 8 வாரங்களில் திருப்பி வழங்காவிட்டால் ரூ.10 லட்சம் இழப்பீடுவழங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சுப்ரமணியன், தமிழ்நாடு மூத்தவிஞ்ஞானிக்கான விருதுக்காக2017-ம் ஆண்டு பல்கலைக்கழகநிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார். தமக்கு விருது வழங்கப்படாத நிலையில், தனது அசல் சான்றிதழ்களை திரும்ப வழங்கக் கோரி சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எந்த பதிலும் வராத நிலையில் தனது அசல் சான்றிதழ்களை திருப்பித்தர உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில்,‘‘மனுதாரரின் அசல் சான்றிதழ்களை பதிவாளர் அலுவலகம் பெறவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்தஉத்தரவுப்படி மனுதாரரின் விண்ணப்பம் உள்ளிட்ட இதர ஆவணங்கள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அசல் சான்றிதழ்களை மட்டும் பெறவில்லை என பதிவாளர்தரப்பில் கூறுவது நம்பும்படியாக இல்லை. எனவே, மனுதாரரின் அசல் சான்றிதழ்களை பல்கலைக்கழக நிர்வாகம் 8 வாரங்களில் திருப்பி ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்’’ என சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT