Published : 23 Dec 2022 06:19 PM
Last Updated : 23 Dec 2022 06:19 PM

பிளாஸ்டிக் குப்பைகளை உருக்கி எண்ணெய்! - அனுமதிக்கு காத்திருக்கும் சென்னை மாநகராட்சி 

சென்னை: சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பையை உருக்கி எண்ணெய் எடுக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கார்பனின் அளவை பூஜ்யத்திற்கு கொண்டு வர "கார்பன் ஜீரோ செலஞ்ச் 2022" என்ற தொலைநோக்கு திட்டத்தை சென்னை ஐஐடி செயல்படுத்த உள்ளது. இதற்காக 30 ஆராய்ச்சி மாணவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டு ஆறு மாத சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக, கார்பன் அளவை குறைக்கும் சென்னை ஐஐடியின் திட்டத்தை சென்னை மாநகராட்சியின் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (டிச.23) நடைபெற்றது. இதில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மேடையில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர், "வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் பசுமை இல்ல வாயுவை உருவாக்குகிறது. பெருங்குடி குப்பை கிடங்கில் தீப்பற்ற குப்பை கிடங்கில் இருந்து உருவாகும் மீத்தேன் வாயு காரணமாக அமைந்தது.

குப்பைகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களால் கார்பன் வெளியேற்றம் நடக்கிறது. இவற்றை குறைப்பதற்காக சென்னை மாநகராட்சி முழுவதும் 5200 பேட்டரி வாகனம் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யவும், தனியாக சேகரிக்கவும் பல தொழில்நுட்பங்கள் உள்ளன.

அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்புகிறோம். ஒரு டன் பிளாஸ்டிக் குப்பைக்கு ரூ.35 மட்டுமே கொடுக்கப்பட்டாலும், அவற்றை மறுசுழற்சி செய்வது சிறப்பானது. நெகிழிப் பொருட்களில் இருந்து எண்ணெய் தயாரிக்கும் திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற இந்தத் திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

கட்டிடக் கழிவுகளும் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவற்றை தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. இவற்றை விரைந்து சென்னையில் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

போக்குவரத்து சிக்னல்களில் அதிக நேரம் நிற்பதால் எரிபொருள் செலவு ஆகிறது. எனவே, இதைக் குறைக்கும் வகையிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும். அவ்வாறு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் நேரம் குறையும்.

கூவம், அடையாறு ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தபட்டுள்ளனர். அடையார், கூவம் நதிகளின் ஓரத்தில் சுவர் எழுப்பப்பட்டு நாட்டு மரங்கள் நடப்படுகிறது. சென்னையில் உள்ள ஆற்றுப் பகுதிகளை பசுமை நிலம் ஆக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியோடு இணைந்து சென்னை ஐஐடியின் புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x