Published : 23 Dec 2022 03:26 PM
Last Updated : 23 Dec 2022 03:26 PM

பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை 8 வாரங்களில் ஒப்படைக்க சென்னை பல்கலை.-க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னைப் பல்கலைக்கழகம் | கோப்புப்படம்

சென்னை: விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் திரும்ப ஒப்படைக்காவிட்டால் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரி துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்ரமணியன், 2016-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மூத்த விஞ்ஞானிக்கான விருதுக்கு கடந்த 2017-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். தனக்கு விருது வழங்கப்படாத நிலையில் தனது அசல் சான்றிதழ்களை திரும்பத் தரக் கோரி சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் மீது எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், தனது அசல் சான்றிதழ்களை திரும்ப தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் தரப்பில், மனுதாரரின் அசல் சான்றிதழ்களை பதிவாளர் அலுவலகம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரரின் விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அசல் சான்றிதழ்கள் மட்டும் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை பதிவாளர் கூறுவதை ஏற்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் சென்னைப் பல்கலைக்கழகம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் மனுதாரருக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட்டார்.

மனுதாரரின் அசல் சான்றிதழ்களை காணாமல் போயிருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சான்றிதழ் காணமல் போனதற்கு காரணமானவர்களிடமிருந்து மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய 10 லட்சம் ரூபாய் தொகையை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.மேலும், மனுதாரருக்கு வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழங்கவும், சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x