Last Updated : 23 Dec, 2022 01:52 PM

 

Published : 23 Dec 2022 01:52 PM
Last Updated : 23 Dec 2022 01:52 PM

மாநில அந்தஸ்து கோரிக்கை | புதுச்சேரியில் 28 ஆம் தேதி முழு அடைப்பு: அதிமுக அறிவிப்பு

அன்பழகன் | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 28 ஆம் தேதி அதிமுக சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்த போது மாநில வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருந்தது. வெவ்வேறு கட்சிகள் ஆட்சி அமைத்தபோது அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்ததால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர், முதல்வருக்கு தொடர்ந்து எதிர்மறையான கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது மாநில நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு ஜனநாயகம் காலில் போட்டு மிதிக்கப்பட்டது.

இதையெல்லலாம் மனதில் வைத்துதான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்கின்ற ஒரு முடிவினை 1998-ம் ஆண்டு ஜெயலலிதா, மத்தியில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அதை வலியுறுத்தி மத்திய அமைச்சரவையில் புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கொள்கை முடிவை அறிவித்தார். அதன்பின்பு வந்த ஆட்சி மாற்றத்தால் மாநில அந்தஸ்து கைவிடப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல பொதுக்குழுவில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முன்மொழிந்தார்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்ந்தாலும் துணைநிலை ஆளுநருடனான கருத்து வேறுபாட்டால் தேர்தல் கால அறிவிப்புகளை செயல்படுத்தும் போது மாறுபட்ட கருத்துள்ள ஆளுநரால் செயல்படுத்த முடியவில்லை. இதனால் அரசுக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த வருவாயில் செயல்பட்டு வரும் நிலையில் மாநில அந்தஸ்து வழங்குவது மத்திய அரசின் கடமையாகும்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில அந்துஸ்து வழங்க விருப்பமில்லாத சூழல் உள்ளது. புதுச்சேரி மாநில மக்கள் நலன்கருதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழிவகை செய்யவும், மாநில அந்தஸ்து தேவை என்பதை அதிமுக மீண்டும் வலியுறுத்துகிறது. பல்வேறு அமைப்புகள் மாநில அந்தஸ்து தொடர்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க மத்திய அரசு வலியுறுத்தி தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அனுமதியோடு வருகின்ற 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.

இந்த முழு அடைப்புக்கு அனைத்து அமைப்புகள், கட்சிகள், பேருந்து உரிமையாளர்கள், வணிகர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த முழு அடைப்பு போராட்டம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் நடைபெறும்.’’என்று தெரிவித்தார்.

ஓம் சக்தி சேகர் | கோப்புப் படம்

அதிமுக முன்னாள் எம்எல்ஏ எதிர்ப்பு: அதே நேரத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஓம் சக்தி சேகர் 28ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு என்பது தனி நபர் விளம்பரம் தேடும் ஒரு முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மாநில அந்தஸ்து என்பது புதுச்சேரி மாநிலத்துக்கு மிக முக்கியமான ஒன்று. ஆனால் அதற்காக புதுச்சேரி மக்களை அவதிக்குள்ளாக்கி முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில், அதுவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் குறிப்பாக வியாபார மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் போராட்டம் நடத்துவது என்பது ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரானது.

மாநில அந்தஸ்து சம்பந்தமாக புதுச்சேரி முதல்வர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பூர்வாங்க பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இது போன்ற சுய விளம்பர போராட்டங்கள் முதல்வர் எண்ணத்துக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மிகப்பெரிய பாதிப்பாக அமைந்து விடும்.’’இவ்வாறு ஓம் சக்தி சேகர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x