Published : 23 Dec 2022 01:17 PM
Last Updated : 23 Dec 2022 01:17 PM
புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு படகு சேவை அடுத்தமாதம் தொடங்காது. சோதனை நிலையப் பணிகள் நடப்பதால் இரு மாதங்களாகும். மூன்றரை முதல் நான்கு மணி நேர பயணத்துக்கு ரூ. 5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாகாணத்தில் இந்தியர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்தியாவின் யூனியன் பிரதேசமான புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு யாழ்ப்பாணத்திற்கு பயணியர் படகு சேவை அடுத்தமாதம் தொடங்கப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதலும் தரப்பட்டுள்ளது.
வரும் ஜனவரியில் படகு போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதா என்று துறைமுகத் துறை செயலர் ஜவகரிடம் கேட்டதற்கு, "படகு போக்கு வரத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தந்துள்ளது. காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐந்து நிறுவனங்கள் படகு போக்குவரத்தை நடத்த விண்ணப்பித்தனர். அவர்களின் பின்புலத்தை ஆராய்ந்து ஒப்புதலை மத்திய அரசு அளிக்கும். படகு சேவைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயணிகள் சோதனை நிலையம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடந்து வருகிறது.
படகு சேவையை ஜனவரியில் தொடங்குவது கடினம். தற்போதைய பணிகள் நிறைவடைய இரு மாதங்களாகும். அதன்பிறகு படகு போக்குவரத்து தேதி இறுதி செய்யப்படும். வர்த்தகம் மட்டுமில்லாமல் சுற்றுலாவுக்கும் உகந்ததாக இச்சேவை இருக்கும். குறிப்பாக காரைக்கால் திருநள்ளாறு கோயில் உள்ளிட்ட ஆன்மீக சுற்றுலாவும் நன்கு வளர்ச்சி அடையும்" என்று குறிப்பிட்டார்.
படகு போக்குவரத்து தொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது,"காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணத்தை மூன்றரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரத்துக்குள் சென்றடையலாம். பயணக்கட்டணம் ரூ. 5 ஆயிரமாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளனர். படகு சேவையில் 300 முதல் 400 பயணிகள் பயணிக்கலாம். அத்துடன் ஒரு பயணி 100 கிலோ வரை உடமைகளை எடுத்து செல்லலாம்" என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT