Published : 23 Dec 2022 04:09 AM
Last Updated : 23 Dec 2022 04:09 AM
சென்னை: ‘கரோனா குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். மக்களைப் பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது’ என்று ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனாவின் புதிய உருமாறிய வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் குஜராத், ஒடிசாவில் இந்த வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பரிசோதனைகளை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கரோனா மேலாண்மைக்கான வழிகாட்டுதல்படி, குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், உள் அரங்குகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி, மருத்துவர்கள் ஆலோசனை பெற்று, கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கையை துறை அலுவலர்கள் எடுக்க வேண்டும்.
சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்ய வேண்டும். பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக, தமிழகத்தில் தற்போதைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செயலர் விளக்கி பேசியதாவது: அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளான ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை செயலர் சுற்றறிக்கையின்படி, கரோனா தொற்று எண்ணிக்கையை கண்காணிக்கவும், தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் உள்ள கரோனா தொற்று எக்ஸ்பிபி வகையாகும். இது, பிஏ-2 என்ற உருமாறிய கரோனாவின் உள்வகையாகும். சில ஆசிய நாடுகளில் தற்போது பரவிவரும் பிஎஃப்-7 வகை கரோனா தொற்று, பிஏ-5-ன் உள்வகையாகும்.
இந்த பிஏ-5 தொற்று தமிழகத்தில் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் கண்டறியப்பட்டு, அது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் தொற்று குறைந்துள்ள நிலையிலும், அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் போதிய அளவில் இருக்கிறது. தேவைப்பட்டால் வசதிகள் கூடுதலாக்கப்படும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கரோனா பரிசோதனை செய்யவும், தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழு மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யவும், நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும் மேலும், இன்புளூயன்சா மாதிரியான காய்ச்சல் மற்றும் அதிக நுரையீரல் தொற்று ஆகியவற்றைக் கண்காணிக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு, தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment