Published : 23 Dec 2022 04:16 AM
Last Updated : 23 Dec 2022 04:16 AM

மு.ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது - சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுக்கு கே.நல்லதம்பி தேர்வு

மு.ராஜேந்திரன்

புதுடெல்லி: ‘காலா பாணி’ என்ற வரலாற்று நாவலுக்காக 2022-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் மு.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது.

தமிழ் மொழி விருதுக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எழுத்தாளர் மு.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காளையார்கோவில் போர் தொடர்பான நிகழ்வுகளை கதைக்களமாக முன்வைத்துஎழுதப்பட்ட ‘காலா பாணி' என்ற வரலாற்று நாவலுக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை ‘அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வடகரை என்ற கிராமத்தில் பிறந்தவர் மு.ராஜேந்திரன். சோழர், சேரர், பாண்டியர், பல்லவர் காலச் செப்பேடுகள் பற்றிய நூல்களை எழுதியுள்ள மு.ராஜேந்திரன், தமிழின் மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவராக திகழ்கிறார். 1801, வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு ஆகிய நாவல்கள் உட்பட ஏராளமான நூல்களை அவர் எழுதியுள்ளார்.

மு.ராஜேந்திரனின் 1801, காலா பாணி, கோணங்கியின் நீர்வளரி, ஆர்.முத்துநாகு எழுதிய சுளுந்தீ, சுப்ரபாரதி மணியன் எழுதிய மூன்று நதிகள் உள்ளிட்ட 11 நூல்கள் இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்காக பரிசீலிக்கப்பட்டன. அவைகளில் இருந்து ‘காலா பாணி’ நாவல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான தேர்வுக் குழுவில் எழுத்தாளர்கள் ஜி.திலகவதி, கலாப்ரியா, ஆர்.வெங்கடேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

ஒவ்வொரு மொழியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு தலா ரூ. 1 லட்சத்துக்கான காசோலை, சால்வை, செப்புபட்டயம் அடங்கிய சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். விருது வழங்கும் விழா பற்றிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது.

சிறந்த மொழிபெயர்ப்பு: அதேபோல் 2022-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ் மொழிக்கான விருதுக்கு பெங்களூரைச் சேர்ந்த எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான கே.நல்லதம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கன்னட மொழியில் நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’ என்ற நாவலை நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவலை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வானோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x