Published : 23 Dec 2022 06:59 AM
Last Updated : 23 Dec 2022 06:59 AM
சென்னை: கணிதம் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஸ்ரீநிவாச ராமானுஜன் போன்று சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக வெளிநாட்டினர் 3 பேருக்கு ‘சாஸ்த்ரா ராமானுஜன் விருது’ வழங்கப்பட்டது.
இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்காய் இவ்ரா, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில் சாவின், கலிபோர்னியா பெர்க்லே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுன்குயிங் டேங் ஆகியோருக்கு முறையே 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான நிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.
32 வயதுக்கு உட்பட்ட கணிதவியலாளர்களுக்கான இந்த விருது, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.3 லட்சம்), பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. நிவாச ராமானுஜனின் பிறந்த நாளை முன்னிட்டு சாஸ்த்ரா வளாகத்தில் மைண்ட்ட்ரீயின் இணை நிறுவனர் என்.எஸ்.பார்த்தசாரதியால் இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
நிவாச ராமானுஜன் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்ற போது, அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 10 பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். இதில் நிவாச ராமானுஜன் பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவை ஆன்லைனில் வழங்கிய டேங்குடன் இவர்கள் சிறந்த விரிவுரைகளை வழங்கினார்கள்.
சாஸ்த்ரா துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் தனது வரவேற்பு உரையில், 2023-ம் ஆண்டு சாஸ்த்ரா வளாகத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு ஏற்கெனவே விருது பெற்ற 6 பேரை அழைத்து வரத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT