Last Updated : 11 Dec, 2016 10:30 AM

 

Published : 11 Dec 2016 10:30 AM
Last Updated : 11 Dec 2016 10:30 AM

வாகனங்களில் ‘ஹைகோர்ட்’ ஸ்டிக்கர் கூடாது: உயர் நீதிமன்ற ஊழியர்களுக்கு எச்சரிக்கை

உயர் நீதிமன்ற ஊழியர்கள் தங்களின் வாகனங்களில் ‘ஹைகோர்ட்’ என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் யார் யார் தங்களது வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு, சுழலாத சிவப்பு விளக்கு பொருத்தலாம் என்பது தொடர்பாக தமிழக அரசு 2014 நவம்பரில் ஓர் அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணைப்படி ஆளுநர், மாநில முதல்வர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சபாநாயகர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் தங்களின் வாகனங்களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தலாம்.

துணை சபாநாயகர், தலைமைச் செயலர், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர், சிறு பான்மை ஆணையத் தலைவர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையர், மாநில சட்ட ஆணையர் உட்பட 14 பதவிகளில் உள்ளவர்கள் தங்க ளது வாகனங்களில் சிவப்பு சுழலாத விளக்குகள் பயன்படுத்தலாம்.

இந்த உத்தரவு மற்றும் வாகனங் களில் சுழல் விளக்குகள் பொருத் துவதை முறைப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2013-ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிபதி, தலைமை மெட்ரோபாலிடன் நீதித்துறை நடுவர்கள், தலைமை நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் பணிக்கு செல்லும்போது போக்கு வரத்து நெருக்கடியில் சிக்காமல் இருப்பதற்காகவும் தங்களின் கார் களில் நீல நிற சுழல் விளக்கு பயன்படுத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சொந்த கார்களில் சுழல் விளக்கு

இருப்பினும் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலர் தங்களின் சொந்த கார்களில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தி உலா வருகின்றனர். பல நீதிபதிகள் தங்களது சொந்த கார்களில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் பெரிய எழுத்தில் நீதிபதி என போர்டு வைத்துக்கொண்டு பவனி வருகின்றனர். இதற்கு தடை விதிப்பது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உயர் நீதி மன்ற ஊழியர்கள் தங்களின் வாக னங்களில் ஹைகோர்ட் என ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பிறப்பித்துள்ள சுற்றறிக் கையில், ‘‘சென்னை உயர் நீதி மன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஜூடிசியல் அகாடமி, கோவை, மதுரையில் உள்ள ஜூடிசியல் அகாடமி மண்டல மையங்களில் பணிபுரிவோர் தங்க ளது வாகனங்களில், ஹைகோர்ட் என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும். இதில் தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு தடை

இது தொடர்பாக நீதிமன்ற அலுவலர் ஒருவர் கூறும்போது, “உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் தங் கள் வாகனங்களில் ஹைகோர்ட் என ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருவது, ஓய்வுபெற்ற நீதிபதிகள் பலர் தங்கள் சொந்த வாகனங்களில் சுழல் விளக்கு பொருத்தி வலம் வருவது தொடர்பாகவும் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பப்பட்டது.

இதையடுத்து முதல் கட்டமாக ஊழியர்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் காரில் சுழல் விளக்குடன் செல்லவும், நீதிபதிகள் தங்களின் சொந்த வாகனங்களில் நீதிபதி என குறிப் பிடவும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x