Published : 22 Dec 2022 10:46 PM
Last Updated : 22 Dec 2022 10:46 PM
சிவகாசி: வாய்ப்பு கிடைத்தால் தந்தையைப் போல் விருதுநகர் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றுவேன் என்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
சிவகாசியில் விருதுநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. அதன் பின் துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மதிமுக அமைப்பு தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்காக சிவகாசி வந்துள்ளேன். சிவகாசி பகுதிகளில் நடக்கும் பட்டாசு விபத்துகளில் விசாரணையின்றி உரிமையாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் அவர்கள் சமுதாய ரீதியாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். விபத்து ஏற்பட்டால் உரிய விசாரணைக்கு பின் உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும்.
பாரளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். எனக்கு அதில் விருப்பம் இல்லை. அதுகுறித்து தலைவர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் தான் முடிவு எடுக்க வேண்டும். மேலும் அதற்கு கூட்டணி கட்சி தலைவர் முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு தர வேண்டும். தலைவர் வைகோ எம்பியாக இருந்த போது விருதுநகர் தொகுதி மேம்பாட்டுக்கு நிறைய திட்டங்கள் செய்தார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக பணியாற்றுவேன்.
விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான் காரணம். ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கிய பின்னரும் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. பால் விலை உள்ளிட்ட அனைத்து விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசு தான் காரணம்.
உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்களித்த பின்னர் தான் அவர் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். மக்கள் ஏற்று கொண்டபின் தற்போது அவர் அமைச்சராகி உள்ளார். இவருடைய மகன் என்பதற்காக ஒருவர் பதவிக்கு வரக்கூடாது எனக்கூறுவது ஜனநாயக விரோதம். சனாதன எதிர்ப்பு என்ற அடிப்படையில் திமுக, மதிமுக இணைந்து செயல்படும்" என்றார்.
இந்த சந்திப்பின்போது, எம்எல்ஏ ரகுராம், முன்னாள் எம்பி ரவிச்சந்திரன், மாநில துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், சிவகாசி மாநகர செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT