Published : 22 Dec 2022 08:54 PM
Last Updated : 22 Dec 2022 08:54 PM

புற்றுநோய்க்கு ஆயுஷ் மருந்துகளைப் பயன்படுத்தும் ஆய்வுகள் தொடக்கம்: கனிமொழி சோமு எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

புதுடெல்லி: "ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய்க்கு, குறிப்பாக கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க இந்திய வகை மருந்துகளைப் பயன்படுத்தி அதற்கான ஆய்வுகளைத் தொடங்கியிருக்கிறது" என்று திமுக எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் பதிலளித்துள்ளார் .

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு, “புற்றுநோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த இந்திய மருந்துகளான ஆயுஷ் மருந்துகளை ஒன்றிய அரசு அங்கீகரித்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஆயுஷ் துறைக்கான ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனோவால் அளித்த பதில்: "ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் சார்பில் இந்தியாவில் தயாரான பல மருந்துகளை புற்றுநோய், சிறுநீரக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றுக்கான சிகிச்சைகளுக்கு பயன்படுத்த ஒன்றிய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் புற்று நோய்க்கு குறிப்பாக கர்ப்பப்பை புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க இந்திய வகை மருந்துகளைப் பயன்படுத்தி அதற்கான ஆய்வுகளைத் தொடங்கியிருக்கிறது. இந்த சிகிச்சை முறைகள் மற்றும் அதன் விளைவுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர சிறுநீரகம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கும் இந்திய மருந்து வகைகள் மூலம் சிகிச்சையளிக்கும் ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.

புற்றுநோய் ஆராய்ச்சியில் ஆயுர்வேத மருத்துவ முறைகளையும் சேர்த்து பரிசோதிகும் வகையில் இந்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனமும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. மும்பையிலுள்ள இந்திய அணுசக்தி துறைக்கு சொந்தமான டாடா நினைவு மையமும் ஆயுர்வேத ஆரய்ச்சி நிறுவனமும் தனியாக ஒரு ஒப்பந்தம் போட்டு புற்றுநோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதற்கான ஆராய்ச்சியை தொடர்ந்து வருகிறார்கள். இதுதவிர, நரம்பியல் நோய்கள், உணவுக் குழாய் மற்றும் செரிமானம் தொடர்பான நோய்களுக்கும் ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும் தொடங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், எய்ம்ஸ் மருத்துவமனை, ஜஜ்ஜார் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ஆயுர்வேதா மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகிய மூன்றும் இணைந்து நொய்டாவில் உள்ள தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலும் ஆயுர்வேத சிகிச்சை கலந்த ஆராய்ச்சி தொடர்கிறது.

அத்துடன், கர்ப்பப்பை வாய் தேய்மானம் தொடர்பான சிகிச்சை முறை மற்றும் ஆராய்ச்சியும்; கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்கான ஆராய்ச்சியையும் ஆயுஷ் அமைச்சகம் உரிய அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து வருகிறது. அதியாவசியமான ஆயுஷ் மருந்துகள் என்று ஒரு பட்டியலை இந்தாண்டு ஜனவரி மாதம் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டது. ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவ முறைகளில் அவசியமான மருந்துகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன" என்று அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x