Published : 22 Dec 2022 03:30 PM
Last Updated : 22 Dec 2022 03:30 PM
சென்னை: காப்புக் காடுகளுக்கு அருகில் செயல்படும் குவாரிகள் மூடப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால பாதிப்பை தடுப்பதுதான் அரசின் நோக்கம். இதை செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.73 கோடிக்கு திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 16 மாவட்டங்கள் கடற்கரைக்கு அருகில் உள்ளன. இந்த மாவட்டங்களில் கடல் அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் வனப்பரப்பை 23.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்த பசுமைத் தமிழகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காப்புக் காடுகள், பறவைகள் சரணாலயம், மலைப்பகுதிகளின் அருகில் குவாரிகள் அமைக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. இதற்கு முன்பு யாரும் குவாரி அமைத்திருந்தால் அவை முழுவதுமாக மூடப்படும்.
காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்க தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்படுகின்றன.மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத் துறையில் உள்ள வனப் பாதுகாவலர்களுக்கு மின்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப அரசு வாங்கும் புதிய பேருந்துகளை மின்சார பேருந்துகளாக வாங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT