Published : 22 Dec 2022 06:36 AM
Last Updated : 22 Dec 2022 06:36 AM
கோவை: கோவை கரிவரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள வணிகக் கட்டிடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 4,500 சதுரடி பரப்பிலான தரைத்தளம் மட்டும் கொண்ட வணிகக் கட்டிடம் கோட்டைமேடு பெருமாள் கோயில் வீதியில் உள்ளது.
இந்த வணிகக் கட்டிடத்தை 20 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த கிதர் முகமது என்பவர் வாடகைக்கு எடுத்து பலசரக்கு கடை நடத்தி வந்தார். குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் வாடகைதொகை உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட வாடகைத் தொகையை அவர் செலுத்தவில்லை. கட்டிடத்தையும் காலி செய்யவில்லை.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தும் பலனில்லை. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வணிகக் கட்டிடத்தை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.கருணாநிதி தலைமையில், தக்கார் செல்வம் அ.பெரியசாமி, கோயிலின் செயல் அலுவலர் ம.சரவணகுமார் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை மீட்டு, அறிவிப்பு பதாகையை வைத்தனர். மீட்கப்பட்ட இந்த வணிகக்கட்டிட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.6 கோடி என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment