Published : 22 Dec 2022 04:07 AM
Last Updated : 22 Dec 2022 04:07 AM

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பிரதான குழாயை பதித்த பின்பே வெள்ளோட்டம் விடவேண்டும்: தமிழக அரசுக்கு போராட்டக் குழுவினர் கோரிக்கை

திருப்பூர்: அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பிரதான குளமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 180 ஏக்கர் கொண்ட சங்கமாங்குளம் உள்ளது. தற்போது இக்குளத்தில் நீர்வளத்துறை சார்பில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குளத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அவிநாசியை சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நந்தகுமார் கூறியதாவது: சங்கமாங்குளத்தின் கரையில் சிலர் கோயில் கட்டுவது, தென்னந்தோப்பு அமைத்து வேலி அமைப்பது என பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாவிட்டால் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு அவர்கள் பட்டா கேட்கும் நிலை ஏற்படும். எனவே அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பயன்பெறும் சங்கமாங்குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அத்திக்கடவு- அவிநாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.சுப்பிரமணியம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: மழைக் காலங்களில் பவானி ஆற்றில் உபரியாக வரும் வெள்ள நீரைக்கொண்டு ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றியக் குளங்கள், 971 குட்டைகளை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர் செரிவூட்டப்படும்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் மூலம் 9902 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே இருந்து ஆண்டுக்கு 1.5 டிஎம்சி நீர் எடுக்கப்படும். பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போளநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி மற்றும் அன்னூர் குன்னத்தூரன்பாளையம் பகுதிகளில் இத்திட்டத்துக்கான நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய சில பணிகளையும் முடித்திருந்தால், திட்டம் இந்நேரம் பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.

நடப்பாண்டில் பருவமழையும் நன்கு பெய்திருப்பதால், 3 மாவட்ட மக்களும் பயனடைந்திருப்பர். கடந்த அக்டோபர் மாதம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜனவரி 15-ம் தேதி உழவர் தினத்தன்று அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வெள்ளோட்டம் விடப்படும்’ என தெரிவித்துள்ளார். ஆனால் நல்லகவுண்டம்பாளையத்தில் பிரதான குழாய் அமைக்கும் பணிகள் முடியவில்லை. குழாய் பதிக்கும் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை ஒட்டி, நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால் கடந்த அக்டோபர் மாதமே 100 சதவீத பணிகள் நிறைவடைந்திருக்கும்.

பிரதான குழாய்கள் மற்றும் கிளைக் குழாய்கள் அமைக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டதால், பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். அனைத்து பணிகளையும் முடித்து திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மேலும் காலதாமதம் ஆகும். எனவே பிரதான குழாயை உடனடியாக அமைத்து, அமைச்சரின் அறிவிப்புப்படி ஜனவரி, 15-ம் தேதி வெள்ளோட்டம் விடவேண்டும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x