Published : 21 Dec 2022 08:09 PM
Last Updated : 21 Dec 2022 08:09 PM
கோவை: "நான் வாட்ச்சிற்கான பில்லை வெளியிட்டு, வாட்ச் சம்பந்தமான எல்லாவிதமான தகவல்களையும் கொடுக்கும்போது, அன்றைய தினம், ஒரு வெப்சைட்டும், ஒரு மொபைல் அப்ளிகேஷனும் தொடங்கவுள்ளோம். பொதுமக்கள் திமுகவின் ஊழல் குறித்து புகார் செய்வதற்கு அந்த வெப்சைட் பயனுள்ளதாக இருக்கும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக பாஜகவின் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து நலத்திட்டம் வழங்கும் விழா இன்று (டிச.21) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியது: "இதில் ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நிறைய செய்திகளைப் பார்க்கிறேன். பத்திரிகை நண்பர்கள் எழுதுவது, சமூக ஊடகங்களில் நம்முடைய திமுக அமைச்சர்கள் சொல்வதெல்லாம் பார்க்க முடிகிறது. இந்த வாட்ச் 2015-ல் வந்தது. 2017-ம் ஆண்டே இந்த வாட்சை நிறுத்திவிட்டனர். மொத்தம் 500 வாட்ச்தான். ரஃபேல் விமானத்தைப் போலவே இந்த வாட்ச் இருக்கும்.
ஆனால், அண்ணாமலை இந்த வாட்சை 2021-ம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு வாங்கியதாக சொல்கிறாரே? என்னடா இது, 2017-ல் இவர் எங்கு பணியாற்றினார்? அரசு அதிகாரியாக அதுவும் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறாரே? அப்போது வாங்கப்பட்டது என்று கிளப்பிவிடலாம் என்று முயற்சிக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை என்னவென்றால், எவ்வளவுக்கு எவ்வளவு அவர்கள் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டுகிறதோ, அவ்வளவும் நல்லது என்று பொறுமையாக இருக்கிறோம். எனவே, நிறைய பேசுங்கள். காரணம், இந்த வாட்ச் வந்த பிறகு, பெல் அண்ட் ரோஸ்-ன் ஆன்லைன் வாரன்டி கிளப்பில் இந்த வாட்சினுடைய எண்ணை நான் வெளியிடுவேன். அதில் நீங்கள் டைப் செய்து பார்த்தாலே, இந்த வாட்ச் எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெரிந்துவிடும். அது 2021 மே மாதத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது? அதற்கான பில்? எல்லா விவரங்களும் வந்துவிடும்.
எனவே, இன்னும் கொஞ்சநாள் பொறுமையாகத்தான் இருக்கப் போகிறோம். நீங்கள் நிறைய பேச வேண்டும். 70 ஆண்டுகளாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். எனவே எங்களுக்கு இது நல்ல ஒரு வாய்ப்பு. நீங்கள் நிறைய பேச வேண்டும். தற்போது இந்த விவகாரம் குறித்து இரண்டு, மூன்று அமைச்சர்கள் மட்டும்தான் பேசுகின்றனர். ஒவ்வோர் அமைச்சரும் இதுகுறித்து பேச வேண்டும். நான் வாட்சிற்கான பில்லை வெளியிட்டு, வாட்ச் சம்பந்தமான எல்லா விதமான தகவல்களையும் கொடுக்கும்போது, அன்றைய தினம், ஒரு வெப்சைட்டும், ஒரு மொபைல் அப்ளிகேஷனும் தொடங்கவுள்ளோம். பொதுமக்கள் திமுகவின் ஊழல் குறித்து புகார் செய்வதற்கு அந்த வெப்சைட் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் பொதுமக்கள் அவர்களது ஊரில் உள்ள திமுக அமைச்சர்களின் பினாமிகள் குறித்தும், அவர்களது பெயரில் உள்ள சொத்துக்களையும் ஒரு மொபைல் போனில் படமெடுத்து இந்த வெப்சைட்டில் பதிவேற்றலாம். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள திமுக அமைச்சர்களின் பினாமிகள் யாரென்று கண்டறியப்படுவார்கள்" என்று அவர் பேசினார்.
முன்னதாக, தான் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் குறித்து பாஜக அண்ணாமலை கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வாட்ச் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், அமைச்சர் செந்தில்பாலாஜி அந்த வாட்சிற்கான பில்லை அண்ணாமலை வெளியிடுவாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT