Published : 21 Dec 2022 06:25 PM
Last Updated : 21 Dec 2022 06:25 PM
சென்னை: "ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து, நிரந்தர சட்டமாக்கும் வகையில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அமைதி காத்து வருவது ஏன்?" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறார். இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்டம் கன ஜோராக நடைபெற்று வருகின்றது. தொடு திரை வசதியுள்ள, கைபேசியை எடுத்தால் தொடர்ந்து வசீகரமான விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
லட்சம் - கோடி ரூபாய்களை வீட்டில் இருந்தபடி ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் அள்ளிக் கொண்டு போகலாம் - நீங்களும் வாருங்கள் என்று அழைப்பு விடுகின்றன . வஞ்சகம் நிறைந்த விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு - தன் கைவசம் உள்ள தொகைகளை இழந்து விட்டு, மேலும் கடன் பெற்றும் பல லட்சங்களை இழந்து, இறுதியில் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் ஆறு பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - இவை வெளியில் தெரிந்த எண்ணிக்கை தெரியாத எண்ணிக்கை எவ்வளவு என்று யாருக்குத் தெரியும்?
ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான வல்லுநர் குழு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திட வேண்டியதன் அவசியத்தை விரிவாக எடுத்துக் கூறி, அதன் விபரத்தை கடந்த 2022 ஜூன் 27-ல் முதல்வருக்கு அளித்ததுள்ளது. சூதாட்டம் குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கப்படட்து. 10,755 பேர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களில் 10,708 பேர் சூதாட்டத்தை தடை செய்திட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவை 2022 செப்டம்பர் 26-ல் கூடி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசரச் சட்டத்தை அறிவித்தது. இதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 28-ல் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மீது ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு உடனடியாக பதிலளித்துள்ளது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அமைதி காத்து வருகிறார்.
இந்த நிலையில், சூதாட்ட நிறுவனங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் பெற்று வருபவர்களை ஆளுநர் சந்தித்ததன் நோக்கமென்ன? சூதாட்ட நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் என்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்தொகை ரூ.29 ஆயிரம் கோடியாக உயரக் கூடும் என்று கூறப்படுகின்றது.
"பணம் பாதாளம் வரை பாயும்" என்ற பழமொழி உண்டு.எங்கெங்கு பாய்கின்றது, யார், யாருக்கு பாய்கின்றது என்பது பெரும் புதிராக உள்ளது. விலை மதிக்கொண்ணா மனித உயிர்கள் பலியாகிக் கொண்டு இருக்கின்றன. மேலும் எத்தனை, எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்பது குறித்து கவலைப்படாத ஆளுநர் அமைதி காப்பது ஏன்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் அலட்சியப்படுத்துவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. இனியும் காலம் தாழ்த்தாது, ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...