Published : 21 Dec 2022 05:38 PM
Last Updated : 21 Dec 2022 05:38 PM
கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் க.சரவணன் தலைமை வகித்தார். துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநகராட்சிக்குத் தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்ளடக்கிய 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, திமுக உறுப்பினர்களான தட்சிணாமூர்த்தி, முருகன், அனந்தராமன், செல்வராஜ் ஆகியோர் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் மாநகராட்சி மேயர் உடனடியாக கையெழுத்திடாமல் காலம் கடத்துகிறார். இதனால் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், உறுப்பினர்களுக்கு உரிய அறிவிப்பு கொடுக்காமல் வார்டு பகுதிகளுக்குச் சென்று ஆய்வில் ஈடுபடுகிறார். இதனால் மேயரின் செயல்பாடுகள் சரியில்லை உள்ளிட்ட பல புகார்களை தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர், இதற்குப் பதிலளித்த மாநகராட்சி மேயர் க.சரவணன், "மாநகராட்சி மேயராக நான் பதவியில் இருக்கும்போது துணை மேயராக பொறுப்பு வகிக்கும் சு.ப.தமிழழகன், மாநகராட்சியின் செயல் தலைவரே என அச்சிட்டு மாநகராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் எனது பதவிக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது, இதற்கு திமுக உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும்" என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள், மாமன்றத்துக்கு வெளியே நடக்கும் கட்சி விவகாரங்கள் குறித்தும் கட்சியினாரால் ஒட்டப்படும் சுவரொட்டிகள் குறித்தும் மேயர் எவ்வாறு மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பலாம் எனக் கூறி மேயர் இருக்கை முன் வந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, முற்றுகையிட்டுக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அவர்களைச் சமாதானப்படுத்திய துணை மேயர் சு.ப. தமிழழகன், “கட்சியின் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ள மேயர், உரியப் பதிலை தெரிவிக்க வேண்டும், தவறும் பட்சத்தில், நாங்கள் இந்தக் கூட்டரங்கிலிருந்து அனைவரும் வெளியேற உள்ளோம்” எனத் தெரிவித்ததால், தான் பேசியதை திரும்பப் பெறுவதாக மேயர் க.சரவணன் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய துணை மேயர் தமிழழகன், "நான் திமுகவுக்கும் கட்சியின் தலைவருக்கும் விசுவாசமாக இருந்து வருகிறேன். கும்பகோணத்தில் மாநகராட்சி மேயர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது சென்னை சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் நான் சந்தித்தபோது ‘மேயர் பதவி உனக்குக் கிடைக்காததில் வருத்தம் இல்லையே தமிழ்’ என அவர் கேட்ட வார்த்தை ஒன்றே எனக்கு ஆறுதலாக இருந்து வருகிறது. எனக்கு அது ஒன்றே போதும்" எனக் கூறி கண்ணீர்விட்டு அழுதார்.
இதனால், திமுக, காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். துணை மேயர் அழுததால், கூட்டத்திலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் சோகத்துடன், அமைதியாக கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT