கோப்புப்படம்
கோப்புப்படம்

மின் இணைப்பு + ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

Published on

சென்னை: மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 100 யூனிட்களுக்கான மின் கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமெனக் கடந்த அக்டோபர் 6 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "ஆதார் எண் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே சாத்தியம். வாடகை வீட்டுதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்தபிறகு புதிதாக வாடகைக்கு வருவோர் தங்களது ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் தமிழக அரசு, ஆதார் எண்ணுக்குப் பதிலாக வேறு ஆவணங்களை இணைப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்க சட்ட ரீதியாக எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்திலிருந்து நிதி வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பின் மூலமாக சமூக நலத்திட்டப் பயன்களை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. அதேபோல மின் மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும்பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என அதில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், இந்த வழக்கில் அடிப்படை ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in