Published : 21 Dec 2022 02:48 PM
Last Updated : 21 Dec 2022 02:48 PM
சென்னை: "அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற தீர்மானத்தை ரத்து செய்ய ஒருவருக்கு மனமிருந்தால், அவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எந்த நிலையிலும் எந்தக் காலக்கட்டத்திலும் அந்த மாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது" என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும், “கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் செல்வாக்கை அதிமுக இழக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.
ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் இன்று (டிச.21) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியது: "நாம் சார்ந்திருக்கிற அதிமுக என்ற இயக்கம் ஒரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. நம் இயக்கம் நெருப்பில் பூத்த மலர். ஊழலை ஒழிக்க உயிர்த்த இயக்கம். லஞ்சப்பேர்வழிகளைத் தோலுரித்துக் காட்டிய கட்சி.
1972-ல் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார். ஏழை எளிய மக்கள் நலம் காக்கத்தான் இந்த இயக்கத்தை உருவாக்கினார். எதிரிகளின் ஏச்சுக்களையும், ஏளனங்களையும் புறந்தள்ளி, அவர்கள் ஏற்படுத்திய இடையூறுகளை எல்லாம் தகர்த்து, மக்களின் ஆதரவோடு 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது மறைவுக்குப் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக 30 ஆண்டு காலம் பொறுப்பு வகித்து கட்சியை வழிநடத்தினார்.
எம்ஜிஆர் மறையும்போது 18 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இந்த இயக்கத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடுமையான உழைப்பு மற்றும் அவர் செய்த தியாகங்கள், இந்த இயக்கத்தை எந்தக் கொம்பாதி கொம்பனாலும் அசைக்கமுடியாத ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட எஃகு கோட்டையாக மாற்றினார்.
2016-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தை ஆண்ட கட்சி மீண்டும் ஆளும் உரிமையை 32 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுத் தந்த ஒரே தலைவி ஜெயலலிதாதான். 30 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்யும் உரிமையைப் பெற்ற ஒரே இயக்கம். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த பெருமை எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் உண்டு. இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டராக இருப்பதே பெருமை என்ற நிலையை அந்த இருபெரும் தலைவர்களும் உருவாக்கித் தந்துள்ளனர்.
அப்படிப்பட்ட நம்முடைய இயக்கம், ஒரு மனிதாபிமானம்கூட இல்லாமல், சர்வாதிகார நிலையின் உச்சத்திலே நின்றுகொண்டு, நான் செய்வதுதான், கட்சியின் சட்டவிதி என்ற நிலையை அதிமுகவில் கொண்டுவர முயற்சி செய்து, இன்றைக்கு அது தோற்றுபோய் கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் செல்வாக்கை இழக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய ஒருவருக்கு மனமிருந்தால், அவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எந்த நிலையிலும் எந்த காலக்கட்டத்திலும் அந்த மாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது" என்று அவர் பேசினார்.
முன்னதாக, அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் பழனிசாமி தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் தனது பலத்தை காட்டும் வகையில், அதிமுகவின் 75 மாவட்டங்கள் மற்றும் இதர அணிகளில் தனது ஆதரவு நிர்வாகிகளை நியமித்தார். குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
இந்த நியமனத்தை தொடர்ந்து, அவர் தன் தரப்பு நிர்வாகிகளுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளார். இதன் முன்னோட்டமாக அவர், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தை இன்று சென்னையில் கூட்டினார். கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் 88 மாவட்ட செயலாளர்கள் , நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT