Published : 21 Dec 2022 02:18 PM
Last Updated : 21 Dec 2022 02:18 PM
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று பேசி வருவதாக அமைச்சர் சேகர்பாபு சாடினார்.
சென்னை பாடியில் உள்ள கைலாசநாதர் கோயில் மற்றும் திருவாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (டிச.21) ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோயில்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "அண்ணாமலை ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று பேசிக் கொண்டிருக்கிறார். இது வெளிப்படையான உலகம். மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை.
அண்ணாமலை பட்டியலை வெளியிடட்டும். நீதிமன்றம் இருக்கிறது. ஆதாரம் இருந்தால் சட்டப்படி எப்படி செல்லச் வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். எதையும் எதிர்கொள்ள திமுக ஆட்சி தயார்.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி, ஊழலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனில் அக்கறையுள்ள ஆட்சியாக இருக்கிறது. நல்லதொரு ஆட்சிக்கு இடையூறாக இருக்கும் தடைகளை எல்லாம் படிக்கல்லாக மாற்றி முதல்வர் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிக் காட்டுவார்" என்று அவர் கூறினார்.
முன்னதாக, வாட்ச் விலை சர்ச்சையின் எதிரொலியாக, “திமுகவின் அமைச்சர்கள், பினாமிகள் மற்றும் உறவினர்களின் சொத்துப் பட்டியல் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT