Published : 21 Dec 2022 07:21 AM
Last Updated : 21 Dec 2022 07:21 AM

வருவாய்த் துறை சார்பில் ரூ.20 கோடியில் அலுவலகம், குடியிருப்புகள்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக துணை ஆட்சியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினார். உடன், வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், துறை செயலர் குமார் ஜெயந்த் உள்ளிட்டோர்.

சென்னை: வருவாய்த் துறை சார்பில் ரூ.19.84 கோடி மதிப்பிலான கட்டிடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை ஆட்சியர்களாக தேர்வான 18 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்கும் வருவாய்த் துறையின் பணியை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், செங்கல்பட்டில் ரூ.1.15 கோடியில் மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டிடம், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ரூ.54.95 லட்சத்தில் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

மேலும், மதுரை மாவட்டம், கள்ளிக்குடி, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தலா ரூ.2.79 கோடியிலும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ரூ.3.83 கோடியிலும், சாத்தான்குளத்தில் ரூ.3.07 கோடியிலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ரூ.3.07 கோடியிலும், திருச்சிராப்பள்ளியில் ரூ.2.59 கோடியிலும் வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன.

மொத்தம் 19 கோடியே 84 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

18 பேருக்கு பணி நியமனம்: இதுதவிர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக துணை ஆட்சியர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலர் குமார் ஜெயந்த், வருவாய் நிர்வாக இணை ஆணையர் அ.ஜான் லூயிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x