Last Updated : 10 Jul, 2014 09:30 AM

 

Published : 10 Jul 2014 09:30 AM
Last Updated : 10 Jul 2014 09:30 AM

தாராள செலவுகளால் தள்ளாடும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்: சர்ச்சை எழுந்ததால் குடியரசுத் தலைவர் வருகை ரத்து?

திருவாரூரில் உருவாக்கப்பட்டு வரும் தமிழகத்தின் ஒரே மத்திய பல்கலைக்கழகம், நிதி முறை கேடுகள், வீண் செலவுகள் மற்றும் அடிப்படை வசதி குறைபாடுகளால் தள்ளாடுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடங்களை திறக்க ஜூலை 19-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அவரது வருகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள நீலக்குடி, நாகக்குடி கிராமங்களில் 520 ஏக்கரில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மத்திய பல்கலைக்கழகம் உருவாக்கப் பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதத்துக்கும் இங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் விகிதத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. அந்த அளவுக்கு பணத்தை வீணடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கல்வியாளர்கள் கூறியதாவது:

யுஜிசி விதிப்படி பல்கலைக் கழகத்தில் தற்போதுள்ள 20 பாடப் பிரிவுகளுக்கு 20 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். இவர்களுக்கு தலா 2,200 சதுர அடிக்குள்தான் வீடு கட்டப்பட வேண்டும். ஆனால், விதிகளை மீறி 32 வீடுகள், அதுவும் தலா 3,600 சதுர அடியில் 2 ஆண்டு களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இப்போது இங்கு பணியில் இருப்பதோ 3 பேராசிரியர்கள் மட்டுமே. பராமரிப்பில்லாமல் வீடு கள் சேதமடைந்து வருவதோடு ஆடு, மாடு, நாய், வவ்வால்களின் சரணாலயமாக மாறிக்கிடக்கின்றன.

இதேநிலையில்தான் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களின் குடியிருப்புகளும் உள்ளன. இந்த குடியிருப்பு வளாகத்தை உருவாக்க மட்டுமே ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்துக்காக இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள ரூ.700 கோடியில் 90 சதவீதத்துக்கு மேல் கட்டிடங்களுக்கே செலவிடப்பட்டு விட்டது. ஆனால், மாணவர்களுக்குத் தேவையான நவீன ஆய்வகங்கள், கருவிகள், நூலகத்துக்கு வேண்டிய புதிய தொழில் நுட்பம் தொடர்பான நூல்கள், மேசை, நாற்காலிகள் போன்றவற்றை வாங்கக்கூட நிதி இல்லை என கை விரித்துவிட்டனர்.

வடிவமைப்பில் தொடங்கி கட்டிடங்கள், அணுகு சாலைகள், பல்நோக்கு அரங்கம், தற்காலிக கேந்திரிய வித்யாலயா பள்ளி, 8 கி.மீ. நீள சுற்றுச்சுவர், வடிகால்கள், நடைபாதைகள், ஆற்றோர தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டது வரை பல்வேறு குளறுபடிகளும் நிதி முறைகேடுகளும் நடந்துள்ளதாக ஆசிரியர்களே கூறுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பல்கலை. உருவாக்கத்தில் முனைப்புடன் இருந்த துணைவேந்தர் பி.பி.சஞ்சய்க்கு, ஓராண்டு பணி நீட்டிப்பு ஆணையை வழங்கிய குடியர சுத் தலைவர் மாளிகை, மறு நாளே அந்த உத்தரவை ரத்து செய்ததாகவும் அதனால் அவர் வெளி யேறியதாகவும் கூறப்படுகிறது.

திடீரென விலகியது ஏன்?

இதேபோல, 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட பதிவாளர் வி.கே. ஸ்ரீதர், 3 மாதங்கள் முன்ன தாகவே ஜூன் 30-ம் தேதியுடன் பணியிலிருந்து விடுவித்துக் கொண் டுள்ளார். புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலை வரை அழைத்துவிட்டு, இவர் திடீரென பணியிலிருந்து விலகியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) டி.செங்கதிரிடம் கேட்டபோது சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

பல்கலைக்கழக விதிமீறல் குற்றச்சாட்டுகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம்.மதிவாணன், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது. அதுபற்றி அவரிடம் கேட்ட போது, “இது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எனக்குத் தொடர்பில்லை. தமிழக அரசுக்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை” என்றார்.

குறைவான மாணவர்கள்

யுஜிசி விதிப்படி இங்கு 20 பேராசிரியர்கள், 40 இணைப் பேராசிரியர்கள், 160 உதவிப் பேராசிரியர்கள் (1 : 2 : 4 விகிதப்படி) இருக்க வேண்டும். ஆனால், தற்போது 58 ஆசிரியர்களே உள்ளனர். இவர்களில் பாதி பேர் ஒப்பந்த ஆசிரியர்கள்.

20 பாடப் பிரிவுகளில் தலா 30 மாணவர்கள் வீதம் சேர்க்கப் பட்டிருந்தால் கடந்த 5 ஆண்டு களில் ஆயிரக்கணக்கான மாணவர் கள் சேர்க்கப்பட்டிருக்க வேண் டும். ஆனால், மொத்தம் 533 மாணவர்களே படிக்கின்றனர். பிஎச்டி படிப்பு 4 துறைகளுக்கு மட்டுமே உள்ளன. இதில் 8 பேர் மட்டுமே படிக்கின்றனர். பல்கலைக்கழகத்துக்கு முக்கிய மானவர்களான துணைவேந்தர், பதிவாளர், நூலக அலுவலர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் யாரும் இல்லை. அத்துடன் 70 சதவீதம் பேராசிரியர்கள், போதிய மாணவர்கள் இல்லாமலே விழா நடத்துவதால் யாருக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது? நாட்டின் மிகப் பிரபலமான கல்வியாளர்கள், கலைஞர்களைக் கொண்ட நிர்வாகக் குழு மற்றும் ஆட்சிக் குழுவைக் கொண்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கிடையே, பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 19-ம் தேதி திருவாரூர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

துணைவேந்தர் (பொறுப்பு) விளக்கம்

மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புவகிக்கும் டி.செங்கதிரிடம் ‘தி இந்து’ சார்பில் திங்கள்கிழமை கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு புதன்கிழமை மாலை விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழகத்தில் தற்போது இயங்கிவரும் பாடப் பிரிவுகளின் நிலைக்கேற்ற ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்ப நிரந்தர பணி நியமனம், ஒப்பந்த பணி நியமனம், நேரடி சேர்க்கை முறைகள் கையாளப்படுகின்றன. அறிவியல் துறைகள் அனைத்தும் ஆய்வகங்களுடன் செயல்படுகின்றன. கல்வி வளாகக் கட்டிடங்கள் 31,781 சதுர மீட்டரிலும், குடியிருப்பு வளாகக் கட்டிடங்கள் 13,823 சதுர மீட்டரிலும் (மொத்தம் சுமார் 1.50 லட்சம் சதுர அடி) கட்டப்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 122 குடியிருப்புகளில் 62 குடியிருப்புகள் பயன்பாட்டில் உள்ளன. கேந்திரிய வித்யா பள்ளிக்கான தற்காலிக கட்டிடம் ரூ.1.01 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிரந்தரக் கட்டிடம் 14.24 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 265 மாணவர்கள் படிக்கின்றனர்.

இதில் 11 மாணவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களின் குழந்தைகள். கட்டிட கட்டுமானங்கள் தொடர்பாக சிஏஜி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது வழக்கமானதுதான். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x