Published : 15 Dec 2016 09:38 AM
Last Updated : 15 Dec 2016 09:38 AM

ஐஐடி, அண்ணா பல்கலை.யில் ஆயிரக்கணக்கான மரங்கள் சேதம்: பசுமைப் போர்வை குறையும் அபாயம்- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம்

சென்னையின் இயற்கை ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளாக விளங்கும் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் சென்னையில் பசுமைப் போர்வை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச் சகத்தின் அறிவுறுத்தல்படி, சென்னை மாநகரில் 426 சதுர கிலோமீட்டர் பரப்பில் 144 சதுர கிலோமீட்டர் (33.3 சதவீதம்) பரப் பளவுக்கு பசுமை போர்வை இருக்க வேண்டும். ஆனால், 9 சதுர கிலோ மீட்டர் (6.25 சதவீதம்) மட்டுமே உள்ளது. சென்னை பசுமைப் போர்வையின் பெரும்பகுதி ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ராஜ்பவன் வளாகத்தில்தான் உள்ளன.

தற்போது ‘வார்தா’ புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளன. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், ராஜ்பவனிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி வளாகத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதன் டீன் பி.ராம் கூறியதாவது:

ஐஐடி வளாகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ளன. இதில் பெரும் பாலானவை 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய, சுமார் 50 அடிக்கு மேல் வளர்ந்தவை. புயலின் தாக்கத்தால், 230 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. ஆனால், ஆயிரக்கணக்கான மரங்களின் கிளைகள் முறிந்துள்ளன. இந்த வளாகத்தில் பல சாலைகளுக்கு நிழல் சாலை என பெயரிட்டுள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக, வெயில் சாலைகளாகவே தெரிகின்றன.

விழுந்த மரங்களில் பெரும்பா லானவை, வெளிநாட்டு மரங்களான கொன்னை மர குடும்ப வகையைச் சேர்ந்த குல்மோகர், காசியா சியாமியா போன்றவைதான். இவை விரைவாக வளரும் என்பதற்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டவை. உள்நாட்டு மர வகைகளான நாவல், வேம்பு, புளிய மரம் போன்றவற்றில் கிளைகள் மட்டுமே முறிந்துள்ளன. வேரோடு சாயவில்லை. ஆலமரம், அரச மரம் போன்றவை வயது முதிர்ந்த நிலையில் சாய்ந்துள்ளன.

மரங்கள் விழுந்த பகுதியில் முழுவதுமாக அகற்றிவிட்டு, அப் பகுதியில் உள்நாட்டு மரக்கன்றுகள் மற்றும் பனை மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அதன் பதிவாளர் எஸ்.கணேசன் கூறும்போது, ‘‘சென்னையில் இயற்கையாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், ராஜ்பவன் போன்றவை விளங்குகின்றன. அந்த அளவுக்கு இங்கு மரங்கள் உள்ளன. இயற்கை சீற்றத்தால் இப்பகுதியில்தான் அதிக அளவில் மரங்கள் விழுந்துள்ளன. நான் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பார்த்த மரங்கள், இன்று வேரோடு சாய்ந்து கிடப்பது வருத்தம் அளிக்கிறது.

இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. அதிக அளவில் தூங்கு மூஞ்சி மரங்களே விழுந்துள்ளன. உள்நாட்டு மரங்களான புளிய மரம், வேம்பு போன்றவை விழவில்லை. இப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு, இழந்த பசுமைப் போர்வையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ராஜ்பவனிலும் நூற்றுக்கணக் கான மரங்கள் விழுந்திருப்ப தாகவும், அவற்றை அகற்றி வருவ தாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x