Published : 20 Dec 2022 07:56 PM
Last Updated : 20 Dec 2022 07:56 PM

பரந்தூர் போராட்டம் தொடரும்: அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டக் குழு தகவல்

சென்னையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பரந்தூர் போராட்டக் குழுவினர்.

சென்னை: "நூறு சதவீதம் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றுதான் ஆய்வு முடிவுகள் வரும். சாத்தியம் இருப்பதாக முடிவுகள் வந்தால், ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை விமான நிலையத் திட்டத்திற்காக விடுக்கொடுக்க மாட்டோம்" என்று பரந்தூர் போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர்.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், 13 கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், போராட்டக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப்பிரமணி கூறியது: " ஏகனாபுரம் கிராமத்தின் பின்பகுதியில், விமான நிலையத்திற்கான வரைபடத்தில் வரையப்பட்டுள்ள இரண்டு ஓடுதளங்களுக்கு நடுவில் ஒரு ஓடை வருகிறது. அந்த ஓடையானது, அந்தப் பகுதியில் உள்ள அத்தனை ஏரிகளிலும் நீர்நிரம்பிய பிறகு, அந்த ஓடை வழியாகத்தான் எந்தவிதமான தடையுமின்றி கொசஸ்தலை ஆற்றை அடைகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஓடையானது, இந்த விமான நிலையத் திட்டத்தால் தடைபடும்.

சுற்றுச்சுவர் கட்டியோ, அல்லது அதனை வேறு வகையில் தடுத்தாலோ, அருகில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிவை நோக்கிச் செல்லும். விவசாயம் பாதிக்கும். இதனால் சென்னைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை ஏற்கெனவே எடுத்துக் கூறியிருந்தோம். இதனை அப்போது கேட்டுக்கொண்ட அமைச்சர்கள், இதுகுறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறுவதாகவும், விமான நிலையத் திட்டம் குறித்து, நாங்கள் கோரும் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கைச் சார்ந்த நல்ல ஒரு முடிவை முதல்வர் எடுப்பார் என்றும் கூறினார்கள். ஆனால், கடந்த 3 மாதங்களாக நாங்கள் காத்திருந்தோம். அரசு எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், டிட்கோ மூலம் கள ஆய்வு தொடர்பான டெண்டர் கோரப்பட்டு, வரும் ஜன.6-ம் தேதி அந்த டெண்டர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து எங்களது கோரிக்கையை அரசுக்கு அழுத்தமாக தெரிவிக்க முடிவு செய்து நாங்கள் நேற்று பேரணி மேற்கொண்டோம். அப்போது எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளின் தகவலின்படி இன்றைய தினம் 3 அமைச்சர்கள் உடனான இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோம்.

இந்தக் கூட்டத்தில் எங்கள் பகுதியில் விமான நிலையம் வந்தால் ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூறினோம். புதிதாக அருகில் அரக்கோணத்தில் இருக்கும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ராஜாளி விமானப் படைத்தளம், இந்த திட்டத்தால் பாதிக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினோம்.

அதேபோல், ஓடுதளங்களுக்கு இடையில் வரும் ஓடையில் அண்மையில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இடையார்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் மூழ்கி இறந்த செய்தியை எடுத்துக் கூறினோம். அப்போது அமைச்சர்கள், நீங்கள் கூறியுள்ள கோரிக்கைகளின்படி ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கான டெண்டர்தான் தற்போது கோரப்பட்டுள்ளது. தமிழக அரசு விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், முடிவெடுக்கும் என்று அமைச்சர்கள் கூறினர்.

ஆனால், நாங்கள் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் மாலை நேரங்களில் நடத்தும் அந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்போம். விமான நிலையத் திட்டத்தை அரசு கைவிடும் வரை, அரசின் அறிவிப்புக்கு ஏற்பட எங்கள் போராட்டங்கள் பல்வேறு வடிவங்கள் எடுக்கும்.

நூறு சதவீதம் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றுதான் ஆய்வு முடிவுகள் வரும். அதையும் மீறி, சாத்தியம் இருப்பதாக முடிவுகள் வந்தால், நாங்கள் ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை விமான நிலையத் திட்டத்திற்காக விடுக்கொடுக்க மாட்டோம். அதற்காக நாங்கள் எந்த நிலையிலும் எங்களை இழக்கத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தை குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "ஏகனாபுரம் கிராமத்தில் நில எடுப்பு செய்யாமல் தவிர்க்கும்படியும், விவசாய நிலம் பாதிக்காத வகையிலும், நீர்நிலைகள் பாதிக்காத வகையிலும், விமான நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் பேச்சு வார்த்தையில் கலந்துக் கொண்ட விவசாயிகள் கேட்டுக்கொண்டார்கள்.

விமான நிலையம் அமையவுள்ள இடம் மற்றும் அதன் புவியியல் மாற்றம் நீரியல் அமைப்பு குறித்து சம்பந்தப்பட்ட வல்லுநர்குழு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்கள் ஏகனாபுரம் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்கள். ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதனை ஏற்றுக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x