Published : 20 Dec 2022 04:26 AM
Last Updated : 20 Dec 2022 04:26 AM

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் ஒரு கி.மீ.க்கு கல்குவாரி, சுரங்கம் செயல்படலாம் - தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை

சென்னை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்கு கல்குவாரி செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை: கடந்த 2021-ம் ஆண்டு நவ.3-ம்தேதி தமிழக அரசின் தொழில்துறையால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கி.மீ.சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல் (குவாரி) மற்றும் அரைத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 16-ம்தேதி நடைபெற்ற சுரங்கத் துறை மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில், இதுதொடர்பாக திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், அரசுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் குவாரி, சுரங்கம்தோண்டும் உரிமம் பெற்றவர்கள்விருப்பம் கருதியும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்துக்குள் குவாரி மற்றும் சுரங்கம் தோண்டுதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்வது தொடர்பான கருத்துருவை அனுப்பும்படி நீர்வளத் துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, குவாரி, சுரங்கம்தோண்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, தமிழ்நாடு சிறு கனிமங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்படி, தமிழக அரசுக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் கருத்துருவை அனுப்பினார். இதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு இதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிவிக்கையில், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானை வழித்தடங்களின் எல்லையில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் குவாரிகள் செயல்பட அனுமதியில்லை. அதே நேரம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தால் அதன் எல்லையில் இருந்து ஒரு கி.மீ.க்குள் சுரங்கம் மற்றும் குவாரிகள் செயல்பட இருந்த தடையை விலக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x