Published : 17 Dec 2016 02:30 PM
Last Updated : 17 Dec 2016 02:30 PM
தடுப்பணையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாணிக்கண்டி பழங்குடி கிராமம். இங்கு நூற்றுக்கணக்கான இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன. நீலியாற்றுக்கு இப்பகுதியில் தாணிக்கண்டி ஆறு என்று பெயர். இப்பகுதி மக்களின் தண்ணீர்த் தேவை முழுவதையும் இது தீர்த்துவைக்கிறது.
ஆற்றைக் கடந்து 3 கிலோமீட்டர் அடந்த காடுகளுக்குள் சென்றால் அணையாத்தா பாறை வருகிறது. மிருகங்கள் உலவும், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்பதால், வேட்டைத் தடுப்புக் காவலர்களை துணையுடன் செல்ல வேண்டும்.
அங்குள்ள வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கூறும்போது, ''ஒற்றை யானை வந்துவிட்டால் வெடி போட்டுக்கூட விரட்ட முடியாது. தப்பித்து ஓட வேண்டியதுதான். இங்குள்ள மைதானத்தில் யானைகள் இளைப்பாறும். இப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் 3 குழுக்களாக சுற்றித் திரிகின்றன'' என்றனர்.
இவற்றைக் கடந்து சென்றால் பாறைகள் மத்தியில் சலசலத்துச் செல்லும் அருவியைக் காணலாம். அருவியின் கீழ்பகுதியில் ‘ட’ வடிவிலான, இடிபாடுகளுடன் கூடிய சுவர் தடுப்புகளின் வழியே இரண்டாக பிரிகிறது அருவி.
“அதில் இடப்பக்கமாக பிரிவது நீலி. வலப்பக்கம் செல்வது சின்னாறு. அதற்கு ராசி வாய்க்கால் என்ற பெயரும் உண்டு. கரிகாலன் திருச்சியில் கல்லணை கட்டிய காலத்திலேயே இந்த அணையையும் கொங்கு சோழன் கட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது கல்லணையாக இருந்த இதை, பின்னர் சுண்ணாம்புக்காரைகள் பூசி சராசரி அணையாக மக்கள் மாற்றியுள்ளனர்.
தண்ணீருக்காக மோதல்?
இங்கு தண்ணீருக்காக, செம்மேடு, நரசீபுரம் ஊர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தண்ணீரைப் பயன்படுத்துவதில் இரு நிலச்சுவான்தார்களிடையே ஏற்பட்ட தகராறு, 2 ஊர்களிடையிலான மோதலாக மாறி, சிலர் இறந்துள்ளனர். ஒருகட்டத்தில் செம்மேடு , நரசீபுரம் நில உடமையாளர்கள் தங்களுக்குள் பெண் எடுத்து, பெண் கொடுக்க ஆரம்பித்தனர். அதனால் இந்த சண்டை விலகியது. இரு தரப்பும் குறிப்பிட்ட நாட்களுக்கு முறை வைத்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டனர். அதுதான் இப்போதும் நடந்து வருகிறது. வருடத்தில் 12 மாதங்களுமே வற்றாத நொய்யலின் நீராதாரம் இதுதான்” என்றார் பயணத்தின்போது உடன் வந்த சமூக ஆர்வலர் சிவா.
இவர், மேற்குத் தொடர்ச்சி மலையில் நொய்யலின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக, இரு ஆண்டுகளுக்கு முன் ‘நொய்யலைக் காப்போம்!’ என்ற போராட்டத்தையும் வெவ்வேறு அமைப்புகளின் மூலம் நடத்தியுள்ளார்.
அணையாத்தா பாறையில் வரும் நீர், சுவையில் சிறுவாணியை மிஞ்சுகிறது. அதில் குளிக்கும்போது மூலிகை மணம் நாசியில் நுழைந்து மயக்குகிறது. “இதற்கு பாபநாசம் அணை என்றும் பெயர் உண்டு. இங்கிருந்து மலையேறிச் சென்றால் 15 கிலோமீட்டர் தொலைவில் பொன்றி மணல் பகுதி வருகிறது.
உருவாகும் நீலியாறு
அருவிகள், நீரோடைகள் நிறைந்த இடம். எப்போதும் ஒசம்பல் (நீர்த்துளி கொப்பளிப்பு) இருந்துகொண்டே இருக்கும். அங்கே பாதாளக்கல் படுகை என்றும் ஓரிடம் உண்டு. அதில் 3 பக்கமும் கொப்பளிக்கும் ஒசம்பல் சேர்ந்து நீரோடையாகிறது. அதையடுத்து உள்ளது கூத்தாடிப்பாறை. அங்கே கடும் கோடைகாலத்தில் கூட மழைத் தூறல் இருக்கும். அந்த அளவுக்கு பசுமை மாறாக் காடுகள் நிரம்பிய பகுதி அது. அதற்கு கீழே ஆயிரக்கணக்கான ஏக்கர் சமதளப் பரப்பில், சாம்பிராணி, சுருளி, வலங்கை, ஈட்டி, வேங்கை, நீர்மத்தி, தானிபுளி, மூங்கில், நெல்லி, அத்தி, மலைவேம்பு, புங்கன், அரச மரங்கள் நிறைந்துள்ளன. அதற்கு அப்பாலும், ஆடுதூக்கி சோலை, எலிவால் மலை, குஞ்சாரன் முடி என பல வனப் பகுதிகள் உள்ளன.
அவைதான் இங்கே நீலியாற்றை உருவாக்குகிறது. இந்தக் காடுகளில் உள்ள குங்குலியம், பூச்சக்காய், வெட்டிவேர், நன்னாரி, கடுக்காய் போன்ற மூலிகைகள், ஆற்றின் நீருக்கு மருத்துவக் குணத்தையும், மணத்தையும் தருகின்றன.
மூங்கில்கள் மற்றும் பசும்புற்கள் யானைகளுக்கு நல்ல உணவு. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவை இப்பகுதியில் நிறைந்து இருந்தன. பின்னர், பல்வேறு மரங்களை அகற்றிவிட்டு, தேக்கு மரங்களை வைத்துவிட்டனர். இவை மனிதனுக்குப் பணமாகுமே தவிர எந்த வகையிலும் யானைகளுக்கு உணவாகாது. அதனால்தான் உணவு கிடைக்காமல் காட்டு யானைகள் ஊருக்குள் வருகின்றன” என்றார் சிவா.
‘அணையாத்தா’ பாறை வழிபாடு
இந்த அணையாத்தா பாறை அருவி கிளை பிரியும் இடத்தின் கரையில் பெரிய பாறை இருக்கிறது. பழங்குடி மக்கள் ‘அணையாத்தா’ என்று குறிப்பிட்டு வணங்குவது இதைத்தான். கோடையில் விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள். அப்போது மட்டும் மக்கள் உள்ளே செல்ல வனத் துறை அனுமதிக்கிறது.
இங்கிருந்து வடக்கு நோக்கி மலைப் பாதையில் 3 கிலோமீட்டர் சென்றால் வைதேகி நீர்வீழ்ச்சி என்னும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி வருகிறது.
அணையாத்தா பாறையிலிருந்து தென்மேற்கே 5 கிலோமீட்டர் மலைக் குன்றுகள் வழியே நடந்து சென்றால், கோவை குற்றாலத்தை அடையலாம். பழங்குடி மக்கள் மட்டுமே மலைகளைக் கடந்து, வனப் பொருட்கள் சேகரித்து வாழ்ந்துள்ளனர்.
ஆனால், மற்றவர்கள் இங்கிருந்து மீண்டும் வந்த வழியே சென்று, மலையிலிருந்து கீழே இறங்க வேண்டியுள்ளது.
மடக்காடு கிராமத்திலிருந்து வடக்கே 5 கிலோமீட்டர் சென்றால் வருகிறது நரசீபுரம் கிராமம். இங்கிருந்து மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் வனத் துறை சோதனைச்சாவடி உள்ளது. அதிலிருந்து 3 கிலோமீட்டர் மலை உச்சிக்கு வடமேற்கு சென்றால் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி எனப்படும் வைதேகி நீர்வீழ்ச்சியைக் காணலாம்.
வைதேகி காத்திருந்தாள்…
“மழைக் காலங்களில் இங்கே யாருமே வர முடியாது. அந்த அளவுக்கு அரை கிலோமீட்டர் தொலைவுக்கு பொங்கிப் பிரவாகம் எடுக்கும் இந்த அருவி. இங்கு ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தை எடுத்தார்கள். இங்குள்ள ஆலமரத்தில்தான் கதாநாயகி ஊஞ்சலாடினார். இந்த ஆலமரத்துக்கு பல நூறு ஆண்டுகள் வயதிருக்கும்” என்று குறிப்பிட்டார் உடன் வந்த வேட்டைத்தடுப்புக் காவலர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொங்கல் பூப்பறிப்பு, சித்திரைத் திருவிழாவின்போது மக்கள் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் இங்கு வந்து செல்வர். அதற்கு முன்புதான், வைதேகி காத்திருந்தாள் படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்துள்ளது. தொள்ளாயிரம் மூர்த்திகண்டி என்ற பெயர் வைதேகி நீர்வீழ்ச்சியாக பெயர் மாற்றம் கண்டு, பிரபலமும் ஆனது.
இப்போதெல்லாம் சோதனைச் சாவடியிலிருந்து அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரையும் அனுமதியில்லை. வனத் துறையின் முழுக் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது. அதனால் வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. போகும் வழியிலேயே நிறைய யானைகள், மான்களைப் பார்க்க முடிந்தது.
எனினும், இதன் அடிவாரப் பகுதியிலேயே பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சில பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகள் காணப்படுகின்றன.
இது சூழலுக்கு பாதிப்பில்லையா என்று கேட்டால், “நரசீபுரம், வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சியில் சாலை அமைக்கவும், சாக்கடை கட்டுவதற்கும் தேவைப்பட்ட மண்ணை இங்கிருந்துதான் எடுத்துள்ளனர். வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தில் மண் எடுத்ததால், எங்களால் தடுக்க முடியவில்லை” என்றனர் வனத் துறையினர்.
பயணிக்கும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment