Published : 20 Dec 2022 06:15 AM
Last Updated : 20 Dec 2022 06:15 AM

மதுரையில் ரூ. 114 கோடியில் நடந்து வரும் கலைஞர் நூலக கட்டுமானப் பணி ஜன.2-வது வாரத்தில் நிறைவடைகிறது

மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டிடம். படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: மதுரையில் ரூ.114 கோடி செலவில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாகக் கட்டப்படும் கலைஞர் நூலக கட்டுமானப் பணி 2023-ம் ஆண்டு ஜன.2-வது வாரத்தில் நிறைவடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து மதுரை- புதுநத்தம் சாலையில் 2 லட்சம் சதுர அடி இடம் தேர்வானது. நூலகக் கட்டுமானப்பணியை 2022 ஜனவரி 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து உள் அலங்காரப் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜன.2-வது வாரத்தில் கட்டுமானப் பணிகளை முழுவதுமாக முடித்து கட்டிடத்தை ஒப்படைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுப் பணியாற்றி வருகின்றனர்.

7 மாடிகளுடன் அமையும் இந்த நூலகத்தில் 3 மாடிகள் வரை முகப்புத் தோற்றம் அமைகிறது. நூலகத்தில் இலவச வைஃபை வசதி, நகரும் படிக்கட்டு, மின் தூக்கி வசதிகள், சிற்றுண்டியகம் அமைக்கப்படுகின்றன. தரைத் தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டுக் கூடம், மாற்றுத் திறனாளிகள் பிரிவு அமைகிறது.

நூலகத்தின் கீழ்ப்பகுதியில் 100 கார்கள், 200 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்கள், குழந்தைகள் நூல்கள், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல், நிலவியல், உணவியல், உளவியல், பொறியியல், பொருளாதாரம், பொது நிர்வாகம், மருத்துவம், இலக்கியம், சுயசரிதை, பயணம், வேளாண்மை, சுற்றுப்புறச் சூழல், 12,000 அரிய நூல்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 2.50 லட்சம் நூல்கள் இடம் பெற உள்ளன.

மொத்தம் ஒதுக்கப்பட்ட ரூ.114 கோடியில் கட்டிடப் பணிக்கு ரூ.99 கோடியும், நூல்கள் வாங்க ரூ.10 கோடியும், கணினி உபகரணங்கள் வாங்க ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வு எழுதுவோர், பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் நூல் ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x