Published : 14 Dec 2016 11:44 AM
Last Updated : 14 Dec 2016 11:44 AM
வரலாற்றுப் பின்னணி கொண்ட காலிங்கராயன் வாய்க்கால் மூலம் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.
786 மதகுகள், 72 பாலங்கள் உள்ள இந்த வாய்க்கால் மூலம் நேரடியாக 15,743 ஏக்கர், மறைமுகமாக 7,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் ஆதாரமாகவும் இந்த வாய்க்கால் திகழ்கிறது. இதன் பாசனப் பரப்பில் 50 சென்ட் முதல் ஒரு ஏக்கர் வரை வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் 75 சதவீதம் பேர் உள்ளனர். மீதியுள்ளவர்கள் 10 ஏக்கர் வரை வைத்துள்ள நடுத்தர விவசாயிகள்.
இந்த வாய்க்கால் மூலம் 3 போகம் நெல் விவசாயம் நடந்துள்ளது. பின்னர், பல்வேறு பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளாக மஞ்சள், கரும்பு விவசாயமே பிரதானமாகியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, “காலிங்கராயன் பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, 135 நாட்களுக்கு பவானியில் தண்ணீர் விடப்படும்” என்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அறிவித்தார். அடுத்த நாள் வாய்க்காலில் தண்ணீர் வந்ததால், விவசாயிகள் மஞ்சள், கரும்பு, வாழை சாகுபடியைத் தொடங்கினர்.
ஆனால் 15 நாட்களுக்குப் பிறகு வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. முளைக்கும் தருவாயிலேயே பயிர்கள் கருகின. தொடர்ந்து கிணறுகளும் வற்ற ஆரம்பித்தன. பயிர்களைக் காப்பாற்ற உயிர்த் தண்ணீராவது வழங்குமாறு, அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களை சந்தித்து வலியுறுத்தினர் விவசாய சங்கத் தலைவர்கள். ஆனால், “பவானிசாகர் அணையில் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், விவசாயிகளால் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில், கடந்த மாதம் கொடுமுடி கரட்டுப்பாளையம் விவசாயி ராமலிங்கம்(56) விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். அவர் 3.5 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த மஞ்சள் முற்றிலும் கருகியதால், ரூ.5 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த 4 நாட்களில் கொடுமுடி தாமரைப்பாளையம் வெங்கமேட்டூர் விவசாயி முத்துசாமியும்(65), கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உயிர்த் தண்ணீர்
இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில், “50 சதவீத பயிர்கள் காய்ந்துவிட்டன. மீதமுள்ள பயிர்களைக் காக்க, 15 நாட்களுக்காவது உயிர்த் தண்ணீர் வழங்காவிட்டால், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியாது” என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், போதிய நீர்இருப்பு இல்லாததால், தண்ணீரைத் திறப்பது சாத்தியமில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பின்னர், மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் முறையிட்டதால், “டிசம்பர் 3-ம் தேதி தண்ணீர் திறப்பதாகவும், அதுவரை பொறுத்திருக்குமாறும், அதற்குள் மழை வந்துவிட்டால் பிரச்சினை சரியாகிவிடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீர் திறக்கப்படவில்லை.
அப்போது தமிழகத்தை புயல் மிரட்டிக் கொண்டிருந்ததால், மழை பெய்யுமென்ற விவசாயிகளின் நம்பிக்கையும் பொய்த்துப்போனது. உயிர்த் தண்ணீர் கோரி 7-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போரட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்தனர். அதற்குள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததால், அந்தப் போராட்டமும் நடைபெறவில்லை. தற்போது, எஞ்சிய மஞ்சள் பயிரைக் காக்க, மழை வருமா என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
கடன் தொல்லை
ஆவுடையார்பட்டிபுதூர் விவசாயி ஆர்.சுப்பிரமணியம், அவரது மகன் ஆகியோர் தலா 70 சென்ட் நிலத்தில் மஞ்சளும், கரும்பும் சாகுபடி செய்தனர். இதில், சுப்பிரமணியத்தின் மஞ்சள் பயிர் கருகிய நிலையில், அவரது மகன் சாகுபடி செய்த கரும்பு, தண்ணீரை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதுகுறித்து சுப்பிரமணியம் கூறும்போது, “50 ஆண்டுகளாக கரும்பு, மஞ்சள் சாகுபடி செய்துவருகிறோம். சில நேரங்களில் முதலுக்கு மோசம் வராவிட்டாலும், உழைப்பு வீணாகும். மஞ்சளைப் பொறுத்தவரை ஏக்கருக்கு ரூ.1 லட்சம் கிடைக்கும். நல்ல விலை கிடைத்தால் ரூ.2.5 லட்சம் வரை கிடைக்கலாம். அதை நம்பி, கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். ஆனால், இம்முறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றித் தவிக்கிறோம்” என்றார்.
அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல் கூறும்போது, “மஞ்சள் சாகுபடியால் எனக்கு ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, 2002-2003-ல் ஏற்பட்ட வறட்சியின்போது, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மழை வந்ததால் சமாளித்தோம். ஆனால், இம்முறை மழை முற்றிலும் ஏமாற்றிவிட்டது. 10 நாட்கள் தண்ணீர் கிடைத்தால் போதும். இருக்கிற பயிரையாவது காப்பாற்ற முடியும்” என்றார்.
காலிங்கராயன் பாசன சபைத் தலைவர் வி.எம்.வேலாயுதம் கூறும்போது, “காலிங்கராயன் பாசன விவசாயிகள் 2 ஆயிரம் பேர் திரண்டு போராட்டம் நடத்தியதாக வரலாறு கிடையாது. ஆனால், தற்போது, அந்த அளவுக்கு பிரச்சினை முற்றிவிட்டது. அதை அரசு நிர்வாகம் உணர்ந்ததாகவே தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில், வாய்க்காலின் மேல்பகுதி விவசாயிகள் 1,100 ஏக்கரில் வாழை, நடுப்பகுதி, கடைகோடிப்பகுதி விவசாயிகள் 5,200 ஏக்கரில் கரும்பு, 6,300 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டுள்ளார்கள். அதில் 1,300 ஏக்கர் முற்றிலும் காய்ந்துவிட்டது. மீதி பகுதிகளில் பாதி காய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது மக்களுக்கு குடிநீர் தேவைக்காக 15 நாளைக்கு தண்ணீர் விட்டால்கூட நிலம் ஈரமாகி, கிணற்றுக்கு தண்ணீர் கிடைத்துவிடும். 30 சதவீத பயிர்களையாவது காப்பாற்றிவிட முடியும்.
பவானிசாகரில் 45.45 அடி தண்ணீர்
தற்போது பவானிசாகர் அணையில் 45.45 அடி தண்ணீர் உள்ளது. 40 அடி வரை தண்ணீர் இருந்தாலே குடிநீர்த் தேவை பூர்த்தியாகும். மீதி 5.45 அடி நீரை 15 நாட்களுக்கு திறந்துவிடலாம்.
மேலும், மலைகள் மேலே அமைந்துள்ள குந்தா, பில்லூர் உள்ளிட்ட 14 அணைகளில் இப்போது 6.5 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. நீர் மின்சார பயன்பாட்டுக்காக அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் பவானிசாகருக்குத்தான் வரும். எனவே, உயிர்த் தண்ணீர் திறப்பதால் குடிநீருக்குப் பிரச்சினை கிடையாது. அதிகாரிகள் இதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாணப்படாவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT