Published : 19 Dec 2022 05:46 PM
Last Updated : 19 Dec 2022 05:46 PM

ரூ.70 கோடியில் இதுவரை ரூ.4.76 கோடி மட்டுமே செலவு: சென்னை மாநகராட்சியில் ‘தூங்கும்’ வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.70 கோடியில் இதுவரை ரூ.4.76 கோடி மட்டும் செலவு செய்துள்ளனர். மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதியான ரூ.2 கோடியில் ரூ.84 லட்சத்தை மட்டுமே சென்னை மேயர் பிரியா செலவு செய்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத காலத்தில் சென்னை மாநகராட்சியில் கமிஷனர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி செலவு செய்யப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று மார்ச் மாதம் முதல் மேயர் பிரியா தலைமையில் கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 175-க்கு மேல் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

கவுன்சிலர்கள் பொறுப்பேற்று, அடுத்தடுத்து நடந்த கவுன்சிலர் கூட்டங்களில், தங்களது வார்டு மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதையேற்று, 30 லட்சம் ரூபாயில் இருந்து, 35 லட்சம் ரூபாயாக, கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி உயர்த்தப்பட்டது. அந்த நிதியும் போதவில்லை என கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இந்த நிதியில், ஓராண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் மேம்பாட்டுப் பணிகளை செய்து, அடுத்தமுறை பெற்று கொள்ளலாம் என மேயர் பிரியா தெரிவித்தார்.

இந்நிலையில், கவுன்சிலர்களாகப் பொறுப்பேற்று ஒன்பது மாதங்கள் ஆகின்ற நிலையில், மேம்பாட்டு நிதியில் இதுவரை 33.73 கோடி ரூபாய் மதிப்பில் 311 பணிகள் மேற்கொள்ள மட்டுமே அனுமதி கோரப்பட்டள்ளது. அதில், 13.90 கோடி ரூபாய் மதிப்பில் 65 பணிகளுக்கு இ-டெண்டர் கோரப்பட்டு, 4.76 கோடி ரூபாய் மதிப்பில் 58 பணிகள் மட்டுமே ஒப்பம் அளிக்கப்பட்டுள்ளது. 70 கோடி ரூபாய் கவுன்சிலர் மேம்பாட்டு நிதி இருக்கும் நிலையில், அவற்றில் 4.76 கோடி ரூபாயை மட்டுமே கவுன்சிலர்கள் செலவிட்டுள்ளனர். தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் இதுவரை ஒரு பணிகள் கூட தங்களது மேம்பாட்டு நிதியில் கவுன்சிலர்கள் மேற்கொள்ளவில்லை.

மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி: சென்னை மாநகராட்சியில் மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.2 கோடி வழங்கப்படும். மேயர் பிரியா தனது சிறப்பு மேம்பாட்டு நிதியில் உள்ள 2 கோடி ரூபாயில் இதுவரை ரூ.84 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளார். மீதமுள்ள 1.15 கோடி ரூபாயை இதுவரை அவர் செலவிடவில்லை.

மேயர் பிரியா பதில்: இது குறித்து மேயர் பிரியாவிடம் கேட்டபோது, "எனது மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்களுக்கு இதுவரை 84 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும், கொளத்தூர் மாநகராட்சி பள்ளியில் எட்டு லட்சம் ரூபாய் செலவில் கட்டட பணிகளுக்கு ஒப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனது வார்டில் பேருந்து நிறுத்தம், பூங்காக்கள் போன்றவற்றிற்கும் ஒப்பம் கோரப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று மாதங்களில், சென்னையில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் தேவையோ, அவை மேயர் மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பல பணிகளுக்கும் ஒப்பம் கோரப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x